பஹ்ரைனுக்கு சென்னையிலிருந்து விமான சேவை: வைகோவிடம் மத்திய அமைச்சர் உறுதி

பஹ்ரைனுக்கு சென்னையிலிருந்து விமான சேவை: வைகோவிடம் மத்திய அமைச்சர் உறுதி
Updated on
1 min read

பஹ்ரைனிலிருந்து சென்னை வந்தபலரது வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது. அவர்கள் வேலைக்கு பஹ்ரைன் திரும்ப விமான சேவைக்கேட்டு தாம் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் என வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

“வந்தே பாரத் திட்டத்தின்கீழ், வளைகுடா நாடுகளில் இருக்கின்ற இந்தியர்களை மீட்டு வருவதற்கு விமானங்கள் அறிவிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதுவும், சென்னைக்குக் குறைந்த அளவிலேயே வருகின்றன. அதுபோல, கடந்த நான்கு மாதங்களாக, சென்னையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இல்லை.

குறிப்பாக, பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த, அங்கே பணிபுரிகின்ற 800-க்கும் மேற்பட்டவர்கள், சென்னையில் இருக்கின்றனர். அவர்களுள் பலரது வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது. எனவே, அவர்கள் பஹ்ரைன் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

சென்னையில் இருந்து விமானங்களை இயக்குவதாக, கல்ஃப் ஏர் விமான நிறுவனம், பலமுறை வேண்டுகோள் விடுத்தும், இந்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதுகுறித்து, பஹ்ரைன் வாழ் தமிழர்கள் விடுத்த வேண்டுகோளை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கும், வியாழக்கிழமை அன்று மின்அஞ்சல் வழியாகத் தெரிவித்து இருந்தார்.

நேற்று பிற்பகல், அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தொலைபேசியில் வைகோவுடன் பேசினார். அப்போது வைகோ நிலைமையை எடுத்துக் கூறினார். அதற்கு அமைச்சர், விரைவில்,, பஹ்ரைன் நாட்டுக்கு விமான சேவைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்”.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in