Published : 15 Aug 2020 01:36 PM
Last Updated : 15 Aug 2020 01:36 PM

விரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன் பேட்டி

தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி நடந்துவருகிறது, கரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளவேண்டாம், விரைவில் கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும் என உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன் சென்னையில் பேட்டி அளித்தார்.

74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டது. இன்றைய விழாவில் மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு கரோனா நோய்த்தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்று 19 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவை அமைத்தது. தமிழகத்தில் கரோனா தொற்று நடவடிக்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை இந்தக்குழு வழங்கி வருகிறது.

இக்குழுவிற்கு ஆலோசனை அளிப்பதில் குழுவில் இல்லாத உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சாமிநாதன் பெரிதும் உதவி வருகிறார். அமெரிக்காவிலிருந்து பலமுறை காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறார் சௌமியா சாமிநாதன், அவருக்கு இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருதை முதல்வர் வழங்கினார்.

விருதைப்பெற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சௌமியா சாமிநாதன் கூறியதாவது:
“உலக அளவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி உலகம் முழுதும் நடந்து வருகிறது.

உலக அளவில் 200 தடுப்பூசிகளுக்கு மேல் ஆராய்ச்சியில் உள்ளது. நமது நாட்டில் 8 கம்பெனிகள் அதற்கான முயற்சி எடுத்து வருகின்றன. அதற்கு அரசும் உதவி வருகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், இலவசமாக தடுப்பூசி கிடைக்கும். அதற்கான நிதி திரட்டலில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர்”.

இவ்வாறு சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x