

74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் இந்த ஆண்டு கோவிட்-19 முன் களப்பணியாளர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றைய சுதந்திர தின விழாவில் மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு முதல்வர் விருது வழங்கினார்.
தமிழக அரசு கரோனா நோய்த்தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்று 19 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவை அமைத்தது. தமிழகத்தில் கரோனா தொற்று நடவடிக்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை இந்தக்குழு வழங்கி வருகிறது. இந்தக்குழு தமிழகத்தில் கரோனா தொற்று நிலைமையை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை அளித்து வருகிறது.
இக்குழுவின் வழிகாட்டுதலின்படி பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இக்குழுவிற்கு ஆலோசனை அளிப்பதில் குழுவில் இல்லாத உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சாமிநாதன் பெரிதும் உதவி வருகிறார்.
அமெரிக்காவிலிருந்து பலமுறை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறார் சௌமியா சாமிநாதன், அவருக்கு இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருதை முதல்வர் வழங்கினார்.
இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளாகிய மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.
கரோனா தொற்று (கோவிட்-19) காலத்தில் கரோனா பரவலை தடுக்க அரசுக்கு பல்வேறு நிர்வாக ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் அரசுக்கு வழங்கிய ஆலோசனைகளை அங்கீகரிக்கும் வகையில் அரசு அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கி சிறப்பிக்கிறது”.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.