Published : 15 Aug 2020 12:52 PM
Last Updated : 15 Aug 2020 12:52 PM

அடுத்த முதல்வர் ஐயா ஓபிஎஸ்: போடியில் திடீரென முளைத்த போஸ்டர்களால் அதிமுகவில் பரபரப்பு

வரும் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் போடி தொகுதிக்குள் ‘2021-ன் தமிழக முதல்வர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மாவின் அரசியல் வாரிசு ஐயா ஓபிஎஸ்’ என்று புதிதாக போஸ்டர்கள் முளைத்திருக்கின்றன.

“அடுத்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் எம்எல்ஏக்கள் கூடி அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்” என்று அமைச்சர் செல்லூர் ராஜு சொன்ன கருத்துக்கு அதிமுக தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வந்த நிலையில், அமைச்சர்கள் இதுபற்றி ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொன்னதால் பிரச்சினை வளர்ந்து கொண்டே போனது.

இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றிக் கட்சித் தலைமை அறிவிக்கும். அதுபற்றி இப்போது பேசி கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த எதிரிகளுக்கு வாய்ப்பளித்துவிட வேண்டாம்” என்று சொன்னார். துணை முதல்வர் ஓபிஎஸ்ஸோ, “ஒற்றுமையாய் இருந்து கழகத்தைக் காப்போம்” என்று சொன்னார்.

இதற்கிடையே, அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக அமைச்சர்கள் மத்தியில் விவாதங்கள் நடந்துவருவதாகச் சொல்லப்பட்ட நிலையில், அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்கிற ரீதியில் அவரது போடி தொகுதிக்குள் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

‘2021-ன் தமிழக முதல்வர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மாவின் அரசியல் வாரிசு ஐயா ஓபிஎஸ்’, ’அம்மா அவர்களின் ஆசிபெற்ற தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஐயா ஓபிஎஸ்’, ‘அம்மா ஆசிபெற்ற என்றென்றும் மக்களின் முதல்வர் ஐயா ஓபிஎஸ்’, ‘அம்மா அவர்களின் ஆசிபெற்ற ஏழை எளியோரின் எளிய முதல்வர் ஐயா ஓபிஎஸ்’ என்றெல்லாம் போடி தொகுதிக்குள் திடீர் போஸ்டர்கள் முளைத்திருக்கின்றன.

பொதுவாக இதுபோன்ற போஸ்டர்கள் ஆதரவாளர்களின் பெயரில்தான் ஒட்டப்படுவது வழக்கம். ஆனால், இந்த போஸ்டர்கள் அனைத்துமே போடி தொகுதியில் வரும் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ‘கெஞ்சம்பட்டி கிராமப் பொது மக்கள்’ என்ற பெயரில் அதிமுகவின் மூவர்ணத்தில் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.

பொதுவாக அமைதியை விரும்பும் ஓபிஎஸ் இதுபோன்ற போஸ்டர் புரட்சிகளை எல்லாம் ஊக்குவிக்க மாட்டார். எனவே, இந்த போஸ்டர்கள் உண்மையிலேயே ஓபிஎஸ் மீது அபிமானமுள்ள அதிமுகவினரால் ஒட்டப்பட்டதா அல்லது அவருக்குச் சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக யாராவது உள்ளடி வேலை செய்திருக்கிறார்களா என்ற கோணத்தில் இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x