

நெல் அறுவடை செய்த பின் கொள்முதல் நிலையத்தில் டோக்கன் பெற்று, நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டும் என்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உத்தரவால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி, கோடை பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறு வடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்கிறது.
விவசாயிகள் கொண்டு வரும் நெல் மணிகளில் தூசி இல்லாமல் இருப்பதுடன், சரியான அளவு ஈரப்பதம் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துவதால், தூசி இல்லாமல் தூற்றவும், ஈரப்பதம் குறையவும், கொள் முதல் நிலையங்களில் நெல் மணிகளை விவசாயிகள் வாரக்கணக்கில் குவித்து வைத்திருப்பது வழக்கம். சில நேரங் களில் மழை பெய்தால், அவை மழையில் நனைந்து சேதமடையும்.
இந்நிலையில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் பொது மேலாளர்(சந்தை)வ.மீனாட்சிசுந்தரம், அனைத்து கொள்முதல் நிலைய பணி யாளர்களுக்கும் அண்மையில் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:
கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கமடைவதை தவிர்க்கும் வகையில், அறுவடை செய்த பின் டோக்கன் பெற்று, குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய தினம் மட்டுமே நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வர விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஒருவேளை அதற்கு முன்பாக கொண்டு வரும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானால், அதற்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.
நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கொள்முதல் பணியாளர்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தர விமல்நாதன் கூறியதாவது: அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் உடனடியாக கொள்முதல் நிலையத்துக்கு தான் கொண்டு வர முடியும். அவர்களது வயல்களிலோ, வீடுகளிலேயோ சேமித்து வைக்க கூடிய வசதி இல்லை. கொள் முதல் நிலையத்துக்கு கொண்டு வரக்கூடிய நெல்லை விரைவாக கொள்முதல் செய்தாலே, நெல் மூட்டைகள் தேக்கமடையாது.
கொள்முதல் நிலைய அதிகாரிகளின் இந்த உத்தரவு, பணியாளர்களுக்கும், விவசாயி களுக்கும் இடையே பகையை வளர்க்குமே தவிர, கொள்முதல் பணி முறையாக நடைபெறாது. எனவே, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றார்.