

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் குழாய் உடைந்து வெளியேறும் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளதால், அங்கு சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு கட்டிடத்தின் பின்புறம் நேற்று முன்தினம் குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு நேரிட்டது. இதனால், கடந்த 2 நாட்களாக இந்தக் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
இந்தத் தண்ணீர், அதே பகுதியில் திறந்து கிடக்கும் கழிவுநீர் தொட்டியில் உள்ள கழிவு நீருடன் கலந்து அப்பகுதியில் குளம்போல தேங்கியுள்ளது.
கரோனா பரவலுடன், டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குளம்போல தேங்கியுள்ள இந்தத் தண்ணீரிலும் கொசுக்கள் அதிகளவில் உருவாக வாய்ப்பு உள்ளதால், குழாய் உடைப்பை உடனே சீரமைக்கவும், தேங்கியுள்ள தண்ணீரை அகற் றவும் மருத்துவமனையில் உள்ள பொதுப்பணித் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
குவிந்துகிடக்கும் குப்பை
அதேபோல, மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடம் அருகே குப்பை மலைபோல குவிந்து காணப்படுகிறது. துணி, உணவுப் பொட்டல பிளாஸ்டிக் பைகள், காகிதங்கள், முகக்கவசங்கள், டீ கப்புகள், மருந்து காகித பெட்டி கள், காய்ந்த மரக் கிளைகள், செடிகள் என தரம் பிரிக்கப்படாமல் மலைபோல குவிந்து கிடக்கும் குப்பையை அப்புறப்படுத்த வேண்டும் என்கின்றனர் பொது மக்கள்.
இதுதொடர்பாக மருத்துவ மனை முதல்வர் கே.வனிதாவிடம் கேட்டபோது, “குடிநீர் குழாய் உடைப்பைச் சீரமைக்கவும், தேங்கிய தண்ணீரை வெளி யேற்றவும், குப்பையை மாநகராட்சி மூலம் அகற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.