

ஏடிஎம் இயந்திரங்களில் பணத் தட்டுப்பாடு நிலவுவதால், நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஓராண்டுக்கு முன்பு வரை, தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை மாதந்தோறும் தொழிலாளர்களுக்கு நேரடியாக வழங்கி வந்தன. பின்னர், தொழிலாளர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, ஏடிஎம் மையம் அல்லது வங்கியில் ஊதியம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, ஏடிஎம் மையங்கள் மூலம் தொழிலாளர்கள் ஊதியத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில், கரோனாவால் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், வால்பாறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேயிலைத் தோட்டக் குடியிருப்பில் வசிக்கும் தொழிலாளர்கள், கடந்த 3 மாதங்களாக தனியார் வாகனங்களில் வால்பாறை நகருக்கு வந்து, அங்குள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம்-களில் ஊதியத்தைப் பெறுகின்றனர். சில நேரங்களில் ஏடிஎம்-களில் பணம் இருப்பு இல்லாததால் பல கிலோமீட்டர் தொலைவைக் கடந்து வரும் தொழிலாளர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகின்றனர். மேலும், தனியார் வாகனங்களுக்கும் கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் சங்கப் பொதுச் செயலர் பி.பரமசிவம் கூறும்போது, "அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் சம்பள நாட்களில் அதிக கூட்டம் உள்ளது. சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் தொழிலாளர்கள் கூட்டமாகச் செல்வதால், கரோனா பரவும் அபாயமும் உள்ளது. எனவே, முன்புபோல எஸ்டேட் பகுதியிலேயே தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்" என்றார்.