

கரோனா அச்சம் மற்றும் அரசின் தடை உத்தரவால் விநாயகர் சிலை தயாரிப்பு முடங்கியுள்ள நிலையில், நிவாரணம் வழங்க வேண்டுமென சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை தெலுங்குபாளையம், சுண்டக்காமுத்தூர், குறிச்சி, உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விநாயகர் சிலை தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒரு அடி முதல் 12 அடி வரையில், களிமண், காகிதக்கூழ் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிலைகளைத் தயாரிக்கின்றனர். வரும் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள சூழலில், கரோனா அச்சத்தால் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதுகுறித்து தெலுங்குபாளையத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் சக்திவேல் கூறும்போது, "ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாத தொடக்கத்தில் சிலை தயாரிப்புப் பணிகள் தொடங்கும். நடப்பாண்டு வழக்கம்போல ஜனவரியில் தொடங்கிய சிலை தயாரிப்புப் பணி, மார்ச் வரை தடையின்றி நடைபெற்றது. பின்னர், கரோனா ஊரடங்கால் சிலை தயாரிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் பெரிய சிலைகள் வைக்க அரசு அனுமதி மறுத்துள்ளதால், சிலைகள் விற்பனை கேள்விக்குறியாகியுள்ளது. குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை சிலைகள் விற்பனை செய்யப்படும். கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் 210 பெரிய சிலைகள் விற்பனையாகின. நடப்பாண்டு கரோனா மற்றும் அரசின் தடை காரணமாக, சிலைகள் விற்பனையாகவில்லை. இதனால், அதிக அளவுக்கு சிலை தயாரிப்பதையும் நிறுத்திவிட்டோம். இத்தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.
சுண்டக்காமுத்தூரைச் சேர்ந்த அமுதவள்ளி கூறும்போது, "நடப்பாண்டு இதுவரை பெரிய சிலைகளைத் தயாரிக்கவில்லை. 3 அடிக்குள், களிமண்ணாலான சிலைகளை மட்டுமே தயாரிக்கிறோம். அதையும் விற்பனை செய்ய, சாலையோரக் கடைகளுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், எங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார். இது தொடர்பாக காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, "விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக அரசு வெளியிட்ட உத்தரவு கடைப்பிடிக்கப்படும்" என்றனர்.