Published : 15 Aug 2020 08:00 AM
Last Updated : 15 Aug 2020 08:00 AM

கப்பலில் கடிதங்கள் வந்ததை மக்களுக்கு நினைவூட்ட இந்தியாவில் பறக்க விடப்பட்ட ‘தபால் கொடி’- பிரிட்டீஷார் ஆட்சியில் நடந்த சுவாரசியம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் லண்டன் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தபால்கள் வந்ததை பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில், கொல்கத்தா தலைமை தபால்அலுவலகத்தில் தபால் கொடி பறக்கவிடும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டது.

பல்வேறு நாடுகளின் தேசியக் கொடி, ஐக்கிய நாடுகள் சபை கொடி,ஒலிம்பிக் கொடி, அரசியல் கட்சிகள் கொடிகளை பற்றித்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தபால் கொடியை பற்றி தற்கால தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் 1785-ம் ஆண்டு முதல்ஆங்கிலேயர் ஆட்சியில் தபால் கொடிபறக்கவிடும் நடைமுறை இருந்துள்ளது. இந்தக் கொடியைப் பற்றிய நினைவலைகளை தேசிய விருது பெற்ற முன்னாள் தபால் அலுவலர் நா. ஹரிஹரன் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தபால்கள் லண்டனில் இருந்தும், மற்றவெளிநாடுகளில் இருந்தும் கப்பலில்தான் கொல்கத்தாவுக்கு வரும். கப்பலில் தபால்கள் வந்துள்ளதை பொதுமக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கொல்கத்தா தலைமை தபால் நிலையத்தில் தபால் கொடி பறக்கவிடப்படும்.

சிவப்பு நிறத்தில் மூன்று வெள்ளை குறுக்குக் கோடுகள் கொண்ட இந்தக் கொடியில் இங்கிலாந்து ராணியின் கிரீடம் பதிக்கப்பட்டிருக்கும். இதுபோல், வெளிநாடுகளில் இருந்து தபால்கள் வரும்போதும் கொடி பறக்கவிடப்படும். இந்தியாவில் இருந்துலண்டனுக்கும், மற்ற வெளிநாடுகளுக்கும் தபால்கள் அனுப்பப்படும்போதும் கொல்கத்தா தலைமை தபால்நிலையத்தில் இந்தக் கொடி பறக்கவிடப்படும்.

காலப்போக்கில் விமானங்கள் மூலம் தபால் சேவை விரைவுபடுத்தப்பட்டது. அப்போதும், கொல்கத்தா தபால் நிலையத்தில் இந்தக் கொடி பறக்க விடப்பட்டது. சென்னை, மதுரை, கோவை போன்ற ஊர்களில் தலைமை தபால் நிலையங்களில் காலையில் அஞ்சல் ஊழியர்கள் பொதுமக்களுக்கு தபால் விநியோகிக்கச் செல்வதை குறிக்கும் வகையில் மணியடிப்பர். இந்த நடைமுறை தற்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x