Published : 15 Aug 2020 07:47 AM
Last Updated : 15 Aug 2020 07:47 AM

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையின் சாதக பாதகங்களை ஆய்வுசெய்ய 12 பேர் குழுவை அமைத்தது தமிழக அரசு

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பான வரைவு அறிவிக்கையின் சாதகபாதகங்களை ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் துறைச் செயலர் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

நாடு முழுவதும் கச்சா எண்ணெய் எடுத்தல், சமையல் எரிவாயு திட்டங்கள் உள்ளிட்ட பெருந்தொழில் திட்டங்களை ஒரு இடத்தில் தொடங்க வேண்டும் என்றால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீடுகள் செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக, சமூக -பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் உடல் நிலை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில், திட்டங்களை வகைப்பாடு செய்த மத்திய அரசு, குறிப்பிட்ட திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியமில்லை என்று கூறியது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த வரைவு அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 60 நாட்களுக்குள் இது தொடர்பான கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறியது.

அதன்பின், கடந்த ஜூன் 30-ம்தேதி, சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான வரைவு அறிவிக்கையை 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடும்படி மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி நெல்லையில் கரோனா பணிகளை ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, மத்திய அரசு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுஅறிவிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றார். இதையடுத்து, வரைவு அறிவிக்கையை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இக்குழுவில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், நகராட்சி நிர்வாக ஆணையர், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழக தலைவர் எஸ்.சந்திரமோகன், கேர் எர்த் அமைப்பின் ஜெய வெங்கடேசன், தேசிய நிலைத்த கடற்கரை மேலாண்மை மையத்தின் ரமேஷ், சுற்றுச்சூழல் துறை முன்னாள் இயக்குநர் டி.சேகர், மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமத்தின் முன்னாள் தலைவர் தங்கவேலு ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் இந்த குழுவின் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் வரைவு அறிவிக்கையின் அனைத்து அம்சங்களையும், சாதக, பாதகங்களையும் ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பார்கள் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x