

காஞ்சிபுரம் பகுதியில் ஆளில்லாத வீட்டில் கரோனா பாதித்த வீடு என்று தடுப்புகள் அமைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளது. இந்நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகம் எதிரே பல்லவன் நகரில் ஒரு வீட்டில் கரோனா பாதிப்புள்ளது என்று தடுப்புகளை ஏற்படுத்தினர்.
இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ‘இந்த வீடு ஒன்றரை வருடங்களாக பூட்டி இருப்பதாகவும், எதற்காக இங்கு தட்டி அடிக்கப்படுகிறது’ என்றும் கேள்வி எழுப்பினர். அதை பொருட்படுத்தாத நகராட்சி ஊழியர்கள் அந்த வீட்டில் தடுப்புகளை ஏற்படுத்தி விட்டுச் சென்றனர். நகராட்சி ஊழியர்கள் கணக்கு காட்ட இதுபோல் தடுப்புகள் அமைப்பதாக அந்தப் பகுதி மக்கள் புகார் கூறினர்.
இது தொடர்பாக நகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் கேட்டபோது, “அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு தங்கப்போவதாக கூறியதால்தான் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் அந்த வீட்டில்அவர் தங்கக் கூடாது என்ற நோக்கத்தில், தடுப்புகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த வீட்டில் கரோனா பாதித்தவர் தங்க உள்ளார். அதனால்தான் தடுப்புகளை ஏற்படுத்தினோம்” என்றார்.