

கூட்டுறவு சங்க நிதியில் முறைகேடு செய்ததாக திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான குற்றச்சாட்டு குறித்து,8 வார காலத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத் தலைவராக தற்போதைய திமுகஎம்.பி. ஆர்.எஸ்.பாரதி பதவி வகித்தார். அவர் பதவி வகித்த காலகட்டத்தில் வணிக வளாகம் கட்டியதில் ரூ. 7.64 லட்சம் முறைகேடு செய்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்கபதிவாளர் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு, கடந்த 2004-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் நோட்டீஸ் பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க உத்தரவிடக்கோரியும் நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத்தின் தற்போதைய தலைவர் வி.பரணிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இதுதொடர்பாக செங்கல்பட்டு கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் விசாரணையை 8 வாரகாலத்துக்குள் நடத்தி அதன் அறிக்கையை வரும் அக்.10-க்குள்உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.