Published : 15 Aug 2020 06:10 AM
Last Updated : 15 Aug 2020 06:10 AM

இன்று 74-வது சுதந்திர தின கொண்டாட்டம்; முதல்வர் பழனிசாமி தேசியக் கொடி ஏற்றிவைத்து உரையாற்றுகிறார்: சென்னை கோட்டையில் 5 அடுக்கு கண்காணிப்பு; தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணக் கொடியின் நிறத்தை பிரதிபலிக்கும் சென்னை ரிப்பன் மாளிகை. படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோட்டை கொத்தளத்தில் முதல்வர்பழனிசாமி இன்று காலை தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். விழாவை முன்னிட்டு கோட்டை பகுதியில் 5 அடுக்கு கண்காணிப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 74-வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்றுகொண்டாடப்படுகிறது. சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி இன்று காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றுகிறார்.

முன்னதாக, தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.35 மணிஅளவில் புனித ஜார்ஜ் கோட்டைக்குவரும் முதல்வரை தலைமைச் செயலர் கே.சண்முகம் வரவேற்பார். தொடர்ந்து, முப்படை தளபதிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை முதல்வருக்கு அறிமுகம் செய்துவைப்பார்.

பிறகு, கொத்தளம் முன்பு அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஏறி, அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொள்வார். பின்னர், கோட்டை வளாகத்தில் கொத்தளம் பகுதிக்கு வந்ததும், 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவார். கடந்த 2017-ல் முதல்வரான பழனிசாமி, கோட்டையில் கொடியேற்றுவது இது 4-வது முறையாகும்.

விருது, பதக்கங்கள் வழங்குகிறார்

தொடர்ந்து, அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வர் நல் ஆளுமை விருது, சிறந்த சேவைக்கான இளைஞர், இளம்பெண்களுக்கான விருது,சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது, மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட அமைப்பு, மருத்துவருக்கான விருது, கூட்டுறவு சங்கங்களுக்கான விருதுகளை முதல்வர் வழங்குவார். பிறகு, கரோனா முன்களப் பணியாளர்களில் சிறப்பாக பணியாற்றிய 23 பேருக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்குகிறார்.

கரோனா தொற்று காரணமாக சுதந்திரப் போராட்ட தியாகிகள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் விழாவில் பங்கேற்க அனுமதிஅளிக்கப்படவில்லை. அனைவரும்வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு அரசு அறிவித்துள்ளது.

சுதந்திர தின அணிவகுப்புகளில் அனைவரும் முகக் கவசம் அணிந்து பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்கு வரும் அதிகாரிகள் உள்ளிட்டோரும் முகக் கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், முதல்வரின் உரையில்முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. மதுக்கடைகள் எண்ணிக்கை குறைப்பு,தியாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஓய்வூதியம் உயர்வு, கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறிவிப்புகள் என்பன போன்றவை இடம்பெறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு தீவிரம்

சுதந்திர தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதிச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், முக்கிய நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உளவுத் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உஷாராக இருக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 13 கடலோர மாவட்டங்களிலும் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் தீவிரபாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் காவல் ஆணையர்கள் ஆர்.தினகரன், ஏ.அருண் நேரடி மேற்பார்வையில் போலீஸார்தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை கோட்டை பகுதியில் 5 அடுக்கு கண்காணிப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்கள், ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. பல இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உளவு, நுண்ணறிவு போலீஸாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x