Published : 14 Aug 2020 10:40 PM
Last Updated : 14 Aug 2020 10:40 PM

மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% ஒதுக்கீடு: இந்த ஆண்டே ஒதுக்கீடு செய்யவேண்டும் தமிழக அரசு வாதம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்  

மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில், தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தால் ஒப்படைக்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசின் உயர் துறை அதிகாரிகள் அடங்கிய குழு முடிவெடுக்கவும், மேலும் அடுத்த கல்வியாண்டில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், “ மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும்.

ஏனெனில் நடப்பு கல்வியாண்டில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் தகுதியுள்ள ஓபிசி மாணவர்களின் மருத்துவ கனவு பூர்த்தியாகும், எனவே இந்த கல்வியாண்டிலேயே ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்

குறிப்பாக தமிழகத்தில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் சட்டம் உள்ளதால், இடஒதுக்கீடுட்டை அமல் படுத்த கால தாமதம் தேவையில்லாத ஒன்று அதேபோல சென்னை உயர்நீதிமன்றம், இடஒதுக்கீட்டை இறுதி செய்ய இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி மற்றும் தமிழக அரசின் அதிகாரி அடங்கிய குழு ஏற்படுத்தியது தேவையற்றது.

ஏனெனில் தமிழகத்தில் ஏற்கனவே ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் உள்ளது, அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளதால், இட ஒதுக்கீட்டை இறுதி செய்து அமல்படுத்த உயர்நீதிமன்றம் அமைத்த குழு குறிக்கோளற்றது ஒன்றாகும்

மேலும் கரோனா காரணமாக மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 31-2020-ஆம் தேதி என நீட்டிக்கப்பட்டுள்ளது எனவே ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த எந்த சிரமமும் இருக்காது.

எனவே தமிழக இடஒதுக்கீடு சட்டத்தின்படி மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு தமிழகத்தால் ஒப்படைக்கப்படும் இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 2020-21 கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும். இந்த கல்வி ஆண்டில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தவறினால் தகுதியுள்ள ஓபிசி மாணவர்களின் கனவு தகர்ந்து விடுவதோடு, அது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்”. என தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் யோகேஷ் கண்ணா மற்றும் வி.கிரி

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இதுவரை நடைபெறவில்லை, எனவே அகில இந்திய தொகுப்புக்கு தமிழகத்தால் ஒப்படைக்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முறையை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த சிரமம் இருக்காது, அதேபோல முதுநிலை மருத்துவ படிப்பில் தமிழகத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம். ஏற்கனவே ஓபிசி இடஒதுக்கீட்டுக்கான சட்ட பாதுகாப்பு உள்ளது”. என தெரிவித்தனர்.

அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீடு தொடர்பாக இறுதி செய்ய அமைத்த குழு தொடர வேண்டும் என வாதிட்டார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x