

தூத்துக்குடி துறைமுகத்தில் 7 ஆண்டாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ஆயுதக் கப்பலை விற்க அனுமதி கோரி தூத்துக்குடி துறைமுக கழகம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமெரிக்க கப்பல் நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக்கழகம் சார்பில் கேப்டன் பிரவின்குமார்சிங், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தூத்துக்குடி கடல் பகுதியில் அனுமதியில்லாமல் ஆயுதங்களுடன் நுழைந்த அமெரிக்காவை சேர்ந்த எம்.வி.சீமென் கார்டு ஒஹியோ என்ற கப்பலை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 43 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கப்பலில் இருந்த 35 பேருக்கு 11.1.2016-ல் தூத்துக்குடி நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இவர்கள் மீதான தண்டனையை உயர் நீதிமன்றம் 27.11.2017-ல் ரத்து செய்தது.
இந்த வழக்கின் முதல் இரு குற்றவாளியான வாசிங்டன் அட்வான் போர்ட் கம்பெனியின் ஐஎன்சி நிர்வாகி மற்றும் அந்த கம்பெனியின் செயலாக்க இயக்குனர் முகமது பிரஜூல்லா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் பிளாட்பாரத்தில் 12.3.2013 முதல் 7 ஆண்டாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலுக்காக அமெரிக்கா நிறுவனம் 31.12.2019 வரை 2,91,13,634 கட்டண பாக்கி வைத்துள்ளது.
இந்த கட்டணத்தை கேட்டு அமெரிக்க கப்பல் நிறுவனத்துக்கு துறைமுக கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸ் திரும்ப வந்துவிட்டது. கப்பலுக்கு உரிமை கோரும் கப்பல் நிறுவனம் சார்பில் எங்கும் மனுத் தாக்கல் செய்யவில்லை.
கப்பல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் சேதமடைந்து வருகிறது. கடல் நீர் கப்பலுக்குள் புகும் அபாயம் உள்ளது.
எனவே கப்பலை விற்க அனுமதி கேட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. துறைமுக கழகத்தின் மனு மீது விரைவில் முடிவெடுக்க தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அமெரிக்கா கப்பல் நிறுவனம் அட்வான் போர்ட் கம்பெனியின் செயலாக்க இயக்குனர், ஓமன் பியூட்சர் டவர் இந்தியா எல்எல்சி நிறுவனம், தருவைகுளம் காவல் ஆய்வாளர், கியூ பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 9-க்கு ஒத்திவைத்தார்.