Published : 14 Aug 2020 20:03 pm

Updated : 14 Aug 2020 20:03 pm

 

Published : 14 Aug 2020 08:03 PM
Last Updated : 14 Aug 2020 08:03 PM

செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு; தேவைப்பட்டால் மறு பரிசீலனை செய்யப்படும்; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

narayanasamy-on-lockdown
முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு என்பதை தேவைப்பட்டால் மறு பரிசீலனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஆக.14) கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 6,995 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்து சென்றவர்களின் விகிதாச்சாரம் 57 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இது மிகவும் குறைவு. மத்திய அரசு விதிமுறைப்படி கரோனா நோயாளிகளை 10 நாட்கள் தனிமைப்படுத்தி தேவையான மருந்துகளை வழங்கி மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணிக்க வேண்டும்.


ஆனால், மற்ற மாநிலங்களில் 6 அல்லது 7 நாட்களில் நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். நாம் முழுமையாக 10 நாட்கள் தங்க வைப்பதால் கரோனா நோயிலிருந்து விடுபட்டு செல்பவர்கள் குறைந்த அளவு இருக்கிறார்கள். நமக்கு நிறைய படுக்கைகள் தேவைப்படுகின்றன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரை அழைத்துப் பேசினார். அவர்களது ஒத்துழைப்போடு இரண்டு தலா 300 படுக்கைகளும், மற்ற தனியார் மருத்துவக் கல்லூரியில் தலா 200 படுக்கைகளும் அதிகரித்து, அங்கு புதிதாக வருகின்ற நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். படுக்கைகளை அதிகரிப்பது சம்பந்தமாக மாற்று நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் நேற்று என்னையும், மருத்துவத் துறை அதிகாரிகளையும் சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் கரோனா தொற்று பரவுவதற்கான காரணம் என்ன? அதனை தடுத்து நிறுத்துவதற்கு மாநில அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் ஆலோசித்தோம். அரசின் நடவடிக்கைகளை கேட்டறிந்த பிறகு 3 முக்கியமான கருத்துகளை அவர் பகிர்ந்துவிட்டு சென்றுள்ளார். அதிகப்படியான உமிழ்நீர் பரிசோதனையை செய்ய வேண்டும். அப்போதுதான் கரோனா நோயாளிகளை கண்டறிந்து உடனே சிகிச்சை அளிக்க முடியும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க வேண்டும்.

90 சதவீதம் மக்கள் குணமடைந்து சென்றுவிடுவார்கள். 10 சதவீதம் பேர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் அவர் பேசுகையில், ஊரடங்கு போடுவதன் மூலம் கரோனா தொற்றை தடுத்து நிறுத்திவிட முடியாது. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் தொற்று வேகமாக பரவும். மருந்து கண்டுபிடிக்க இன்னும் பல மாதங்கள் ஆகும். 2021 ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகுதான் தேவையான மருந்து மக்களுக்கு கிடைக்கும்.

அதுவரை இந்த கரோனா தொற்று நாடு முழுவதும் பரவும். இதுவரை மக்கள் கரோனாவுடன் வாழ்ந்தாக வேண்டும். தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசையோ, மருத்துவர்களையோ குறை சொல்லி எந்தவித பலனும் இல்லை. மக்கள் தங்களுடைய பொறுப்பை உணர வேண்டும். தேவையில்லாம் பொது இடங்களுக்கு செல்லக் கூடாது என அவர் தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார். நான் தொடர்ந்து பலமாத காலமாக புதுச்சேரி மக்களுக்குக் கோரிக்கை வைத்து வருகிறேன்.

கடைகள், திருமண நிகழ்சிகள், இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றால் தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள், முகக்கவசம் அணியுங்கள், தேவையில்லாமல் வெளியே நடமாடுவதை தவிருங்கள் என்று கூறி வருகிறேன். ஆனால் நகரப்பகுதியில் இருக்கின்ற மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. அதனால்தான் நகரப்பகுதியில் கரோனா தொற்றின் அறிகுறி அதிகமாக இருக்கிறது. மக்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாவிட்டால் தொற்றை தடுத்து நிறுத்தமுடியாது என்பது தெளிவாக தெரிகிறது.

இந்தியாவில் கோவிட் 19 என்ற மருந்து முதல் கட்ட பரிசோதனை முடிந்துள்ளது. இப்போது இரண்டாம் கட்ட பரிசோதனையை ஆரம்பித்துள்ளனர். வெகு விரைவில் மருந்து வரும் என்று நினைக்கிறேன். ஆனால் நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை 'ரெம்டெசிவர்' என்ற மருந்தை வாங்க மாநில அரச நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில அரசு 5 மாத காலங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், சுகாதார களப்பணியாளர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வு எடுப்பதற்கான காலத்தையும் கொடுக்க வேண்டும். எந்தெந்த இடங்களில் அதிகளவில் கரோனா தொற்று பரவுகிறதோ அந்த இடங்களில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தலைமை விஞ்ஞானி தெரிவித்தார். இன்னும் 15 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரிக்கு அவர் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். கண்டிப்பாக அவர் வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரையில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தைப் பொறுத்தவரையில் சனிக்கிழமை இந்திய சுதந்திர நாள், ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி சுதந்திர நாள். இந்த நாட்களில் ஊரடங்கு உத்தரவை போடுவது என்பது சாத்தியக்கூறாக இருக்காது. ஆகவே தான் இம்மாத இறுதி வரை செவ்வாக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்தோம். ஆனால் பலர் ஏன் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவை முதல்வர் அறிவித்திருக்கிறார் என்று கேட்கின்றனர்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் ஏன் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை போடவில்லை என்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சொன்னதுபோல ஒருபுறம் மக்களின் உயிர். மற்றொருபுறம் மக்களின் வாழ்வாதாரம். இதனை சரி சமமாக பார்க்க வேண்டிய நிலை நம்முடைய அரசுக்கு உண்டு. வியாபாரிகள் என்னை வந்து சந்திக்கும் போது மக்கள் ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்ச்சிகள் வைத்துள்ளனர். ஆகவே அதற்கு ஏதுவான முறையில் நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினர். இந்த வாரம் அரசு விழா இருப்பதால் அதனை தவிர்த்துள்ளோம்.

வருகின்ற செவ்வாய்க்கிழமை நாம் பார்ப்போம். மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? முகக்கவசம் அணிகிறார்களா? மக்கள் வெளியே நடமாடாமல் வீட்டிலேயே இருக்கிறார்களா? என்பதையெல்லாம் பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் அதனை நாங்கள் மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கும். மாநில அரசின் நிதியை பொறுத்தவரையில் மத்திய அரசின் உதவி இல்லை. பல நிர்வாக தடைகள் இருக்கின்றன. நிர்வாகத்தில் இருக்கிற ஒருசிலரின் ஒத்துழைப்பு இல்லை. இதையெல்லாம் மீறி புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றை தடுப்பதற்கு முனைந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

இந்த சூழ்நிலையை மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். நிதியை பொறுத்தவரையில் கரோனா தொற்றை தடுத்து நிறுத்த தேவையான நிதியை மாநில அரசின் சார்பில் ஒதுக்கி தாராளமான முறையில் நாங்கள் செலவு செய்கிறோம். கரோனா தொற்று பாதித்தவர்கள் எந்தவிதமான செலவும் இல்லாமல் அரசினுடைய செலவிலேயே மருத்துவம் பார்த்துவிட்டு செல்கின்ற மாநிலம் புதுச்சேரி மட்டும்தான். மற்ற மாநிலங்களில் பல நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் பணம் பறிக்கின்றார்கள் என்ற புகார் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி கொடுத்த கருத்துரைகளின் அடிப்படையில் மாநில அரசு செயல்பட்டு கரோனா தொற்றை தடுத்து நிறுத்த பாடுபடுவோம்" என தெரிவித்தார்.

தவறவிடாதீர்!


கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்முழு ஊரடங்குமுதல்வர் நாராயணசாமிபுதுச்சேரி அரசுCorona virusFull lockdownCm narayanasamyPuduchery governmentCORONA TN

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author