

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து திறம்பட புலனாய்வு செய்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தமைக்காக காவல் ஆய்வாளர் எம்.கவிதாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த புலனாய்வு அதிகாரிக்கான விருது வழங்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வில் சிறந்து விளங்கும் காவல் துறை அதிகாரிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதுகள் 2018-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இவர்களில் ஐந்து பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காவல் ஆய்வாளர்கள் ஜி. ஜான்சி ராணி, எம்.கவிதா, ஏ.பொன்னம்மாள், சி.சந்திரகலா, ஏ.கலா உதவி ஆய்வாளர் டி.வினோத் குமார் ஆகியோர் இம்முறை இவ்விருதைப் பெறுகிறார்கள். இவர்களுடன் புதுச்சேரியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஏ.கண்ணனும் விருது பெறுகிறார்.
இவர்களில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தமைக்காக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் எம்.கவிதாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த 2000-ல் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த கவிதா, 2005-ம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, 2016-ல் ஆய்வாளரானார். இதற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் கவிதா. அப்போது 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் அறந்தாங்கி பகுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார் கவிதா.
இரண்டு வழக்குகளிலும் திறம்பட புலன் விசாரணை நடத்தி, உரிய சாட்சியங்களுடன், குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதில் ஒரு வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இன்னொரு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் கவிதா, இங்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். இப்படி வழக்குகளில் திறம்பட விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தமைக்காக காவல் ஆய்வாளர் கவிதாவுக்கு தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது