Published : 14 Aug 2020 06:04 PM
Last Updated : 14 Aug 2020 06:04 PM

முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பில் காலியாக உள்ள இடங்கள்: நீட் தேர்வு மூலம் நிரப்பக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

முதுநிலை மருத்துவ படிப்பில், அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள 3373 இடங்களை நீட் தேர்வு தகுதி அடிப்படையில் நிரப்பக்கோரி மருத்துவர் ரகுவீர் சைனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் .

முதுநிலை மருத்துவப் படிப்பில் மாநிலங்கள் வழங்கும் இடங்களில் அகில இந்தியத் தொகுப்பில் 3,373 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களுக்குத் தேர்வானவர்கள் வேறு முக்கியமான கல்லூரிகளில் இடம் கிடைத்துப் படிக்கச் செல்வதால் அந்த இடங்கள் காலியாக உள்ளன. அதை மாநிலங்களே நிரப்பிக் கொள்ள திருப்பி அளிக்கப்படுகிறது.

அவ்வாறு இல்லாமல் அகில இந்தியத் தொகுப்பிலேயே வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. மருத்துவர் ரகுவீர் சைனி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “கலந்தாய்வு முடிந்து சேர்க்கை இறுதிப் பட்டியல் வெளியிட்ட பின்னர், மருத்துவர்கள் அவர்களுக்குக் கிடைத்த முதுநிலை மருத்துவப் படிப்பில் சேராமல் இருந்ததால், அகில இந்தியத் தொகுப்பில் 3,373 இடங்கள் காலியாக உள்ளன.

குறிப்பாக எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ சண்டிகர் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கும்போது, பல மருத்துவர்கள் அங்கு சென்று விடுகின்றனர். இதனால் ஏற்கெனவே படிப்பதற்காக இடம் கிடைத்த கல்லூரியில் உள்ள இடங்கள் காலியாக உள்ளன.

மேலும் அந்த முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை மாநில அரசிடம் மாநில ஒதுக்கீட்டின்படி நிரப்பிக் கொள்ள சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் திரும்ப அளிக்கப்படுகிறது. இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டில் பலர் இடம் கிடைக்காமல் பாதிப்படைகின்றனர்.

எனவே மருத்துவர்களின் தேவை அதிகரிப்பைப் பூர்த்தி செய்ய, அகில இந்தியத் தொகுப்பில் காலியாக உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்ப வேண்டும். அதுவும் நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் நிரப்ப வேண்டும்

குறிப்பாக 2-ம் கட்ட கவுன்சிலிங் முடிந்து இறுதிப் பட்டியல் வெளியிடும்போது, அதில் காலியாக இருக்கும் இடங்களை அடுத்தகட்ட இறுதிக் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் பட்சத்தில் நிரம்பாமல், காலியாக உள்ள அகில இந்தியத் தொகுப்பு இடங்களை மாநிலத்துக்கே மீண்டும் ஒப்படைக்கும் நிலை ஏற்படாது. எனவே உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ எம் கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,

அப்போது உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர், அவர்கள் உத்தரவில், “2-வது கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்துள்ள நிலையில், காலியாக உள்ள இடங்கள் மாநில இட ஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன.

முதுநிலை மருத்துவ படிப்பில், அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள 3373 இடங்களை நீட் தேர்வு தகுதி அடிப்படையில் நிரப்பக்கோருவது ஏற்கெனவே உள்ள சட்ட நிலைப்பாட்டை சீர்குலைக்க செய்துவிடும்.

முதுநிலை மருத்துவ படிப்பில், அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள இடங்களை எந்த ஒரு பிரிவுக்கும் மாற்ற முடியாது. ஒருவேளை மாற்றினால் அதிகமான குழப்பங்கள் உருவாகி, மாநில தொகுப்பில் தகுதி பெற்ற மாணவர்களின் சேர்க்கையை பாதிப்பை உருவாக்கும் எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x