காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடற் தகுதித் தேர்வு: ஒரு மாதத்தில் மார்பளவில் 11 செ.மீ. வித்தியாசம் வருமா? - அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடற் தகுதித் தேர்வு: ஒரு மாதத்தில் மார்பளவில் 11 செ.மீ. வித்தியாசம் வருமா? - அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான உடற் தகுதித் தேர்வில் மார்பளவைக் குறைத்து எடுத்து தகுதியிழப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இரு மனுதாரர்களின் மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக சென்னை தி.நகரைச் சேர்ந்த பி.அருண் மற்றும் ராதாகிருஷ்ணன், கணேசன், இளங்கோவன், பூபதி பாண்டியன் உள்பட 6 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் அருண் தாக்கல் செய்த மனுவில், “நான் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழ்நாடு சீரு டைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல்துறை உதவி ஆய் வாளர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதைத் தொடர்ந்து நடைபெற்ற உடற் தகுதித் தேர்வில் மார்பு அளவு எடுக்கப்பட்டபோது சாதாரண நிலையிலும், மூச்சை உள்ளிழுத்து விரிவாக்கம் செய்யும் போதும் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு எனக்கு மார்பு அளவு இல்லை என்று கூறி தகுதியிழப்பு செய்துவிட்டனர். விளையாட்டு வீரர்களுக்கான இடங் கள் பூர்த்தியாகவில்லை என்றால், அந்த இடங்கள் காவல்துறையினரின் வாரிசுகளால் நிரப்பப்படும். அதற் காகவே என்னை வேண்டுமென்றே தகுதியிழப்பு செய்துவிட்டனர். அதனால், மீண்டும் மார்பு அளவு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். மற்ற மனுதாரர்களும் இதே கோரிக்கையை முன்வைத்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இந்த மனுக்களை விசாரித்து, உயர் நீதிமன்ற லஞ்ச ஒழிப்புப் பிரிவு பதிவாளர் நீதிபதி மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் மனுதாரர்களின் மார்பு அளவை மீண்டும் எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவாளர் நீதிபதி வேல்முருகன் மேற்கண்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் வாதாடினார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் வினித் தேவ் வாங்க்டே ஆஜராகி, உதவி ஆய்வாளர் பணிக்கான உடற் தகுதித் தேர்வில் மார்பு அளவு எடுக்கப்படுவது தொடர்பாக விளக்கம் அளித்தார். மனுதாரர் கணேசனுக்காக வழக்கறிஞர் சுபாஷிணி ஆஜரானார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் இளங்கோவனுக்கு 3-8-15 அன்று மார்பு அளவு எடுத்தபோது சாதாரண நிலையில் 96 சென்டி மீட்டரும், விரிவாக்க நிலையில் 98.5 செ.மீ. இருந்துள்ளது. 2.5 செ.மீ. வித்தியாசம். இன்று அவருக்கு மார்பு அளவு எடுத்தபோது சாதாரண நிலையில் 94 செ.மீ., விரிவாக்க நிலையில் 105 செ.மீ. இருந்திருக்கிறது. 11 செ.மீ. வித்தியாசம். இது மிகப்பெரிய வேறுபாடு ஆகும். “ஒரு மாதத்தில் தேவையான அளவுக்கு மார்பு அளவை அதிகப்படுத்திக் காட்ட முடியும்” என்பது குறித்து உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்வதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். இந்த வேறுபாடு ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, மனுதாரர்கள் இளங்கோவன், கணேசன் ஆகியோரது மனுக்களுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும். பி.அருண் உள்ளிட்ட 4 மனுதாரர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 21-ம் தேதி நடைபெறும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உடற்கூறு அளவீடு செய்வது எப்படி?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற போலீஸ் எஸ்ஐ பதவிக்கான விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த கட்டமாக உடற்கூறு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் ஆண்களுக்கு உயரம் மற்றும் மார்பளவு, பெண்களுக்கு உயரம் மட்டும் அளவீடு செய்யப்படுகிறது. ஆண்களுக்கு குறைந்தபட்ச உயரம் 170 செ.மீ., மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ., விரிவடையும்போது குறைந்தபட்சம் 5 செ.மீ. அதிகரிக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆண்களுக்கு உயரம் குறைந்தபட்சம் 167 செ.மீ. இருக்க வேண்டும். பெண்களுக்கு 159 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.

அளவீடு செய்வதில் குளச்றுபடி ஏற்படக்கூடாது என்பதற்காக முதல்முறையாக இம்முறை உயரம் மற்றும் மார்பளவு எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் அளவீடு செய்யப்பட்டது. இதில் அதிருப்தி ஏற்பட்டால் தேர்வாணைய உயரதிகாரிகளிடம் முறையிடும் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in