Published : 25 Sep 2015 08:47 AM
Last Updated : 25 Sep 2015 08:47 AM

வருவாய் பெருக்க டாமின் நிறுவனம் புதிய திட்டம்: தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுகள் மூலம் புதிய பொருட்கள் தயாரிப்பு

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கொண்டு புதிய பொருட்களை தயாரித்து, அதன் மூலம் வருவாய் பெருக்க டாமின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்), 1979-ல் ரூ.200 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கனிம வளங்களை கண்டுபிடித்தல், வெட்டி எடுத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு டாமின் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நெல்லை, மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே குன்னம் என்ற இடத்தில் வெட்டி எடுக்கப்படும் கிரானைட், இந்தியாவில் முதல்தரமான கறுப்பு நிற கிரானைட் கற்களாகும். இதுதவிர, சிவகங்கையில் கிரா பைட், திருப்பத்தூரில் மைக்கா, அரியலூரில் சுண்ணாம்பு கற்கள், காஞ்சிபுரத்தில் மணல் தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு டாமின் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் கனிம வளங்களை தனியாரும் வெட்டி எடுத்து விற்கலாம் என அறிவிக்கப் பட்டது. அதன் பிறகு டாமினில் தொடர்ந்து பல்வேறு முறை கேடுகள் நடந்ததால், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியது. எனவே, கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு தனியாருக்கு கொடுக்கப்பட்ட உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர், குவாரி மேலாண்மை திட்டத்தை அறிமுகம் செய்து, அனைத்து குவாரிகளும் டாமின் தலைமை அலுவலகத்துடன் கணினி மூலம் இணைக்கப் பட்டு தொடர்ந்து கண்காணிக்கப் படுகின்றன. இதன் மூலம் டாமின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.155 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், தொழிற் சாலைகளில் இருந்து வெளியே றும் கழிவுகளைக் கொண்டு புதிய பொருட்களை உருவாக்கி அதன் மூலம் மேலும் வருவாயைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாமின் நிறுவ னத்தின் உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

டாமின் நிர்வாகம் மூலம் கடந்த 2012-ம் ஆண்டில் குவாரி மென் பொருள் மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டதால் முறைகேடுகள் தடுக்கப்பட் டுள்ளன. மேலும், எங்கள் நிர்வாக இயக்குநரின் ஆலோசனை யின்படி, தொழிற்சாலைகளில் கனிமங்களிலிருந்து வெளியேறும் கழிவுகள் மூலம் புதிய பொருட் களை உருவாக்க தொடர்ந்து ஆய்வு நடத்தினோம்.

அதன்படி, வெர்மிகுலேட் கனிமம் பிரித்தெடுக்கும்போது வரும் கழிவுகள் மூலம் தற்போது வெப்பத்தை தாங்கக் கூடிய புதிய டைல்ஸ் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை வீடு கட்டும்போது மேல் பகுதிகளில் பதிக்க பயன்படுத் தலாம். அதிகளவில் வெப்பத்தை தாங்கக் கூடியவை என்பதால் வீடுகளின் உள்ளே அதிக வெப்ப தெரியாது. இதனால், குளிர்சாதனங்களின் பயன்பாடு கணிசமான அளவு குறையும். தற்போது இந்த வகையான டைல்ஸ் விற்பனையை தொடங்கி யுள்ளோம். வரும் நாட்களில் இதன் மூலம் வருவாயைப் பெருக்க திட்டமிட்டுள்ளோம்.

இதேபோல், சிவகங்கையில் உள்ள கிராபைட் தொழிற்சாலை கள் மூலம் வரும் கழிவுகள் மூலம் புது வகையான கற்களை உருவாக்க ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கற்களை வாகன நிறுத்துமிடங்கள், நடைபாதைகளை அமைக்க பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

டாமின் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கே.விஜயன் கூறும் போது, ‘‘டாமின் நிறுவனத்தில் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதிகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, குவாரி மென்பொருள் மேலாண்மை திட்டம் மூலம் டாமின் சிறப்பாக செயல்படுகிறது. தமிழக அரசுக்கும் வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே ரூ.17 கோடிக்கு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. எனவே, இந்நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x