

ஏசி அறைகள் கரோனா வைரஸ் பரவலுக்குக் காரணமாவதால் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை தங்கள் அறைகளுக்கு அழைத்து ஆலோசிப்பதை தவிர்க்குமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ் அப்பில் இன்று (ஆக.14) வெளியிட்ட தகவல்:
"கரோனா தீவிரமாக பரவும் சூழலில் நமது நேரம், பணம் ஆகியவற்றை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவிட வேண்டும். வாழ்வை திரும்ப பெற முடியாது.
நாள்தோறும் கரோனாவால் உயிரிழப்பு நிகழ்வது துரதிஷ்டவசமானது. தற்காப்பு வழிமுறைகளை ஒருங்கிணைந்து பின்பற்றுவது அவசியமான காலமிது. குறிப்பாக அரசு அதிகாரிகளும், அதிகாரமுள்ள மக்கள் தலைவர்களும் இவ்விஷயத்தில் முனைப்புடன் செயல்படுவது அவசியம். முக்கியமாக, அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை தங்கள் அறைகளுக்கு அழைத்து ஆலோசிப்பதை தவிர்க்க வேண்டும். முடிந்தால் காணொலி மூலம் ஆலோசனை நடத்த முன்வருதல் அவசியம்.
குறிப்பாக பல அலுவலகங்கள் குளிரூட்டப்பட்டு மூடப்பட்டுள்ளன. அது கரோனா வைரஸ் பரவ காரணமாகிவிடுகிறது"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.