வெடிமருந்து கிடங்குகளில் தூத்துக்குடி எஸ்.பி திடீர் ஆய்வு: பாதுகாப்பாகக் கையாள உரிமையாளர்களுக்கு அறிவுரை

வெடிமருந்து கிடங்குகளில் தூத்துக்குடி எஸ்.பி திடீர் ஆய்வு: பாதுகாப்பாகக் கையாள உரிமையாளர்களுக்கு அறிவுரை
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

லெபனான் நாட்டில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வெடிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பெரும் விபத்து ஏற்பட்டதில் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள வெடிமருந்து பொருட்கள் சேமிப்பு கிடங்குகளை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, சில்லாநத்தம் ஆகிய பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்து பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள மூன்று தனியார் சேமிப்பு கிடங்குகளில் அவர் ஆய்வு செய்தார். சேமிப்பு கிடங்குகளை பார்வையிட்ட அவர், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

இந்த வெடிபொருட்களை கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வருவாய்த் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று, உரிய சான்றோடு வருபவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு வாங்க வருபவர்களிடம் அப்படியே கொடுத்து விடக்கூடாது. வெடிமருந்து சேமிப்பு கிடங்கின் பணியாளர்கள் உடன்சென்று, கல்குவாரிகள் மற்றும் கிணறுகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வெடிக்க வைக்க வேண்டும்.

மீதம் உள்ள வெடிபொருட்களை மீண்டும் அவர்களிடமிருந்து, திரும்ப பெற்று பாதுகாப்பான முறையில் கிடங்கில் இருப்பு வைக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களுக்கோ, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கோ வெடிபொருட்களை விற்பனை செய்யக்கூடாது. எவ்வித ஆபத்தும் நேராத வகையில் வெடிமருந்து பொருட்களை கையாண்டு, வெடிமருந்து கிடங்குகளை பராமரிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு எஸ்பி அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in