

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீஸார் தீவிர கண்காணிபபில் ஈடுபட்டுள்ளனர். ரயில்நிலையம், சுற்றுலா மையங்கள், மற்றும் கடலோரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தினவிழா கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து சமூக இடைவெளியுடன் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் இன்று கொண்டாடப்பட்டுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கொடியேற்றி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து அண்ணா விளையாட்டரங்கில் நேற்று முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தினவிழாவில் இடம்பெறும் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தேசியக் கொடியை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் ஏற்றி வைத்து ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டார். பின்னர் திறந்த ஜீப்பில் கோட்டாட்சியர் மயில், எஸ்.பி. பத்ரி நாராயணன் ஆகியோர் சென்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்துகொண்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் ரயில் நிலையம், கன்னியாகுமரி ரயில் நிலையம் ஆகியவற்றில் போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பார்சல்கள் மெட்டர் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்பட்டது.
கரோனாவால் சுற்றுலா மையங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத போதிலும் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, மற்றும் பத்மநாமபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் உட்பட முக்கிய கோயில்களில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மேலும் கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான குமரி கடலோர பகுதிகளில் மெரைன் போலீஸார் ரோந்து படகில் சென்றவாறு கண்காணித்தனர். சந்தேகத்திற்கு இடமாக கடலில் சுற்றிவரும் படகுகளை பிடித்து சோதனை இட்டனர். இதைப்போல் கடலோர சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையும், நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி வரையும் வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டன.