

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்றோரை மறித்து இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் வரை 174 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பிறகு ஒன்றரை மாதத்தில் மட்டும் 3,448 பேர் என நேற்று (ஆக.13) வரை 3,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஆலங்குடியில் முகக்கவசம் அணியாமல் சாலையில் செல்வோரை இன்று (ஆக.14) போக்குவரத்து காவல்துறையினர் மூலம் நிறுத்தி, அருகிலேயே கரோனா பரிசோனை செய்யப்படுகிறது.
இதன் மூலம், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு, கரோனா பரிசோதனையும் எளிதாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.அருள் கூறுகையில், "கரோனா தொற்றைத் தடுப்பதற்காக வெளியே செல்லக்கூடிய அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், பலர் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இதனால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை - ஆலங்குடி சாலையில் முகக்கவசம் அணியாமல் செல்வோரை போக்குவரத்துக் காவல்துறையினர் மூலம் நிறுத்தி, அவர்களுக்கு அங்குள்ள அரசு பள்ளி மாணவிகள் விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.
நேற்று 64 பேருக்கும், இன்று 50 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது பரிசோதனையின்போது தேவையான விவரங்கள் சேகரித்து வைக்கப்படுகின்றன.
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே சாலையில் செல்வோரை மறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கை மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார்.