

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, சட்டப்பேரவையில் இருந்து திமுக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும் அ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ்.விஜயதரணி (காங்கிரஸ்), கணேஷ்குமார் (பாமக), கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் எழுந்து, "கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து விவாதிக்க வேண்டும்" என வலியுறுத்தினர். அதற்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்தார்.
அப்போது, இந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். இதையடுத்து, பேரவைத் தலைவர் தனபால் பேசும்போது, "கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டுமானால் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுபோன்ற தீர்மானம் நிறைவேறாத நிலையில் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க எந்த முகாந்திரமும் இல்லை. இதை தெளிவுபடுத்திய பிறகும் பேரவைத் தலைவரை வற்புறுத்துவது விதிகளுக்கு எதிரானது. அவையை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும் துரைமுருகன் (திமுக) எழுந்து, "விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து விவாதிக்க வேண்டும்" என வலியுறுத்தினார். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளின் உறுப்பினர்களும் இதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "அரசிடம் இருந்து பதில் வந்த பிறகு விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக பேரவைத் தலைவர் கூறிய பிறகும் உறுப்பினர்கள் கோஷமிடுகின்றனர். பேரவையை நடத்த விடக் கூடாது என திட்டமிட்டு வந்துள்ளனர்" என்றார்.
விவாதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து துரைமுருகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சர் பேசி முடித்ததும், பேரவை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து விட்டு விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து விவாதிக்க வலியுறுத்தி இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களும் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கை அருகே வந்து கோஷமிட்டனர்.
அவர்களை கண்டித்த பேரவைத் தலைவர், "தொடர்ந்து இதுபோல நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்" என எச்சரித்தார். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாமக, புதிய தமிழகம் கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து கோஷமிட்டுக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, அவர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
அப்போது பேசிய பேரவைத் தலைவர், "கேள்வி நேரம் முடிந்ததும் பேச வாய்ப்பு அளித்தும் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் திட்டமிட்டு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் அவர்களை வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. பேரவை தொடங்கியது முதல் விதிகளுக்கு மாறாக கோஷமிட்ட அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விதிகளில் இடம் உள்ளது. ஆனால், முதல்முறையாக இப்படி நடந்து கொள்வதால் அவர்களை எச்சரிக்கை செய்து வெளியேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்:
வெளிநடப்பு செய்தது குறித்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் திமுக சட்டப்பேரவை குழு துணைத் தலைவர் துரைமுருகன் கூறும்போது, "உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர் தெரிவித்திருக்கிறார். அவர் எழுதிய கடிதத்தில் 2 பக்கத்தை அவரது உறவினர்களுக்கு அளித்துள்ளனர். அந்த கடிதத்தில் உள்ளது விஷ்ணுபிரியா கையெழுத்து இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தினால், வழக்கின் சாட்சியங்களை திருத்தி மறைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசுவதற்கு முற்பட்டோம். ஆனால் பேரவை தலைவர் வழக்கம் போல எங்களை பேச அனுமதிக்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்தோம். தமிழகத்தில் சட்டஒழுங்கு சீர்கெட்டுள்ளது" என்றார்.
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): விஷ்ணுபிரியா எழுதிய கடிடத்தை மூடி மறைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்.
எஸ்.விஜயதரணி (காங்கிரஸ்): விஷ்ணுபிரியா தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. உண்மையை கொண்டுவர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் தலித்களுக்கும், பணிக்கு செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
கணேஷ்குமார் (பாமக): அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பேரவையில் அனுமதிப்பதில்லை. எந்த பிரச்சினை தொடர்பாக பேசினாலும் ஆய்வில் உள்ளது என பேரவை தலைவர் அனுமதி மறுக்கிறார். விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.