

தென்காசி அரசு மருத்துவமனை மூலம் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறியிருப்பதாவது:
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 150க்கும் மேற்பட்ட கொரானோ நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் நோய் அறிகுறிகள் ஆரம்பித்ததுமே, பரிசோதனை மேற்கொண்டு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக்கொண்டால், உயிரிழப்பையும், மற்றவர்களுக்கு நோய்த் தொற்று பரவுவதையும் தடுக்கலாம். தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் மனோகரன் பூரண குணமடைந்து நலமுடன் திரும்பியுள்ளார்.
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை நுண்ணுயிரியல் பிரிவு பரிசோதனை மையம் மருத்துவர் மாயா குமார் தலைமையில் இயங்கி வருகிறது. தென்காசி ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படும் கரோனா சளி மாதிரி ஆய்வு (RT PCR)முடிவுகளை விரைவில் வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ள குழுவின் உதவியுடன் ஒரு லிங்க் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை, தென்காசி மாவட்ட ஆடசியர் தொடங்கிவைத்தார்.
ghtenkasi.in என்ற இணையதள லிங்க் மூலம் பொதுமக்கள் தங்களது தொலைபேசி எண்ணையும், பரிசோதனை பதிவு எண்ணையும் (SRF ID) பயன்படுத்தி, தங்களது ஆய்வக முடிவை பெற்றுக்கொள்ளலாம். தேவை எனில் ஆய்வக முடிவுகளைப் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.