

பூம் பூம் மாட்டுக்காரர்கள் என்று அழைக்கப்படும் ஆதியன் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள், வேறு தொழிலுக்கு மாறிவிட்டார்கள். பிளாஸ்டிக் பாத்திரங்கள் விற்பது, பழைய துணிகள் வாங்கி விற்பது, வளையல், ஊசிமணி விற்பது போன்று பல வேலைகளை பார்த்து வருகின்றனர்.
இவர்களில் ஒரு குழுவினர் நாகப்பட்டினம் அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் சுனாமி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். ஆதி இசைக் கலைஞர்களும், நல்வாக்கு சொல்பவர்களுமான இவர்கள் இன்று வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் காக்க வகை செய்திருக்கிறார், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் தங்க.கதிரவன். ஆம், கால்நடைகளோடு இணைந்த வாழ்வையே மேற்கொண்டிருந்த அவர்களுக்குக் கறவை மாடுகள் வாங்கித் தந்திருக்கிறார், கதிரவன்.
இங்கு வசிக்கும் 15 குடும்பங்களில் முதல் கட்டமாக ஆறு குடும்பங்களுக்குக் கறவைப்பசு மாடுகள் நேற்று (ஆக.13) வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமாக முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் பாலை கொள்முதல் செய்ய பால் கொள்முதல் மற்றும் விற்பனை மையமும் அமைக்கப்பட உள்ளது.
கரோனா காலத்தில் கவலை ரேகைகள் படர்ந்து கிடந்த ஆதியன் சமூகத்துக் குடும்பங்களின் முகத்தில் தற்போது மகிழ்ச்சியும், கண்களில் நம்பிக்கையும் மிளிர்கிறது. அந்த மக்கள் தங்களது புதிய பயணத்தை நிலையான வாழ்வாதாரம் எனும் மாபெரும் இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தங்க.கதிரவன், "இங்குள்ள 'வானவில்' அமைப்பைச் சேர்ந்த ரேவதி இந்த மக்களுக்கு தொடர்ந்து பாதுகாவலராக இருந்துவருகிறார். அவர்தான் இந்த மக்கள் படும் துயரங்களை என்னிடம் சொல்லி இவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டினார். அதனையடுத்துத்தான் அவர் மூலம் அந்த மக்களிடம் கலந்து பேசி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களுக்குக் கறவைப் பசுக்கள் வழங்க முடிவெடுத்தோம்.
தற்போது கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மாடுகளுக்காக கடன் வழங்கப்பட்டாலும், அவர்கள் அந்த கடனை அடைப்பதற்கான வழிகளும் செய்து தரப்பட்டிருக்கிறது. இந்த முயற்சி பல்கிப்பெருகி பல இடங்களிலும் இருக்கும் ஆதியன் சமூகத்தவரின் வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்கும் என எதிர்பார்க்கிறேன். எனது பொதுவாழ்வில் இன்றைய நாள் மிகச்சிறப்பான நாள்" என்றார்