

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக இரண்டாகப் பிரிக்கப்படலாம் என்ற தகவல் அக்கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.எஸ்.சரவணன் மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புறநகரில் 6-ம், மாநகரில் 4-ம் இடம்பெற்றுள்ளன. புறநகர் மாவட்ட செயலாளராக 6 தொகுதிகளுக்கும் சேர்த்து வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இருந்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தனது மகன் ராஜ் சத்யனுக்கு மதுரை தொகுதியில் அதிமுக. சார்பில் போட்டியிட சீட் கேட்டார். இதில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி மதுரை கிழக்கு, மேலூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் கிழக்கு மாவட்டமாகவும், திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகள் மேற்கு மாவட்டமாகவும் பிரிக்கப் பட்டன. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கு மாவட்டத்துக்கும், ராஜன்செல்லப்பா கிழக்குக்கும் செயலாளராக நியமிக்கப்பட்டனர்.
மதுரை மேற்கு, மத்தி, வடக்கு, தெற்கு ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய மாநகர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செயல்படுகிறார். அதிமுகவில் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட 29 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களும் இடம்பெறும் என கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் அறிவிப்பு ஏதும் வரவில்லை.
இது குறித்து மதுரை அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: மதுரை மாநகர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் தெற்கு, மத்தி ஆகிய 2 தொகுதிகள் மதுரை மாநகர் தெற்கு மாவட்டமாகவும், மேற்கு, வடக்கு தொகுதிகள் மதுரை மாநகர் வடக்கு மாவட்டமாகவும் பிரிக்க கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் உள்ளது. வடக்கு மாவட்டத்துக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும், தெற்கு மாவட்டத்துக்கு எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ.வும் செயலாளர்களாக நியமிக்க வாய்ப்புள்ளது. சரவணனை மாவட்டச் செயலாளராக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆர்வம் காட்டுகிறார். செல்லூர் ராஜூ கரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்தபோது மாவட்ட பிரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்தன. செல்லூர் ராஜூ கடுமையாக எதிர்த்ததால், மாவட்டப் பிரிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. எனினும் சரவணன் தரப்பு எப்படியும் அமைச்சரிடமிருந்து 2 தொகுதிகளைப் பறித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் ஆர்.பி உதயகுமாரின் ஆதரவாளராக உள்ளார். வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன்செல்லப்பா மாவட்டச் செயலாளராக உள்ள நிலையில் 2 அமைச்சர்களிடமும் ஒட்டுவதில்லை. மேற்குத் தொகுதியில் வென்ற அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேறு எம்எல்ஏ.க்கள் ஆதரவு இல்லாத நிலையிலேயே கட்சிப் பணிகளை மேற்கொள்கிறார். இந்த நிலையில் 2 தொகுதிகள் பறிக்கப்பட்டால், அவருக்கு மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்றனர்