தூத்துக்குடியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள குட்கா சிக்கியது: 3 பேர் கைது, 3 கார்கள், லாரி பறிமுதல்

தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்களை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டார். 	               படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்களை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டார். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் மதிப்பிலான 1.25 டன்எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 கார்கள், லாரி, ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தனிப்படையை சேர்ந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.சிவராஜா தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் மாலை ஸ்டேட்பாங்க் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் 2 சாக்குப் பைகளுடன் வந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரதத்தை சேர்ந்த பொன்ராஜ் மகன் பிரித்விராஜ் (22) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். சாக்குப் பைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 2,600 பாக்கெட்கள் இருந்தது தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் தூத்துக்குடி குறிஞ்சிநகரைச் சேர்ந்த மகாராஜன் (36), கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த சோலையப்பன் (33) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள குடோனில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.25 டன் எடையுள்ள 10 வகையான 2,44,958 குட்கா பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.17,17,376 ஆகும்.

வடமாநிலங்களில் இருந்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 கார்கள், லாரி மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவர். மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். தூத்துக்குடி நகர டிஎஸ்பி பி.கணேஷ், வடபாகம் ஆய்வாளர் எஸ்.அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in