

கரோனா காலத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையினரின் குறைகளை தெரிவிக்க பிரத்யேக செயலியை (RPF Online Complaint Portal) உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த பி.டெக். இரண்டாமாண்டு மாணவர் ஆர்.பி.சரண் தீபக்.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயின் பாதுகாப்புப் படையில் (ஆர்.பி.எஃப்.), தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
கரோனா தொற்று பரவும் சூழலில், பாதுகாப்புப் படையினர் தங்களது குறைகளைத் தெரிவிக்க நேரடியாக அலுவலகம் வருவதை தவிர்க்கவும், அவற்றுக்கு உரிய தீர்வு கிடைக்கும் நோக்கிலும் இந்த செயலியை மாணவர் சரண் தீபக் உருவாக்கியுள்ளார்.
இவரது தந்தை ரயில்வே பாதுகாப்புப் படையில், உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். செல்போன் செயலிக்கான தேவையை அறிந்த மாணவர், அதை இலவசமாக உருவாக்கித் தந்துள்ளார்.
இந்த செயலியில், புகார் தெரிவிப்பவரின் பிரத்யேக எண் (யு.ஐ.என்.), செல்போன் எண், பதவி உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், விடுப்புகோரி விண்ணப்பிப்பது, சம்பளம் தொடர்பான பிரச்சினைகள், வேலையில் உள்ள குறைகளை மேலிடம் வரை நேரடியாகத் தெரிவிக்க முடியும்.
குறைகளைத் தெரிவித்தவுடன், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தகவல் தெரிவிக்கப்படும். இந்த செயலியை கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வரும் நாட்களில் பயனாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளை ஏற்று, அதற்கேற்ப செயலி மேம்படுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
மாணவர் ஆர்.பி.சரண் தீபக் கூறும்போது, "இதற்கு முன் ரயில்வே பாதுகாப்புப் படையினர், கடிதம் மூலமாகவே தங்களது குறைகள், வேண்டுகோள்களை தெரிவிக்க வேண்டிய நிலை இருந்தது. செயலி மூலம் இந்த நிலையைத் தவிர்க்கலாம்" என்றார்.