Last Updated : 14 Aug, 2020 10:55 AM

 

Published : 14 Aug 2020 10:55 AM
Last Updated : 14 Aug 2020 10:55 AM

நிலச்சரிவால் வீடுகளை இழந்த பழங்குடியினர்: ஓராண்டாகியும் மாற்றிடம் கிடைக்காமல் பரிதவிப்பு

கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவால் குடியிருப்புகளை இழந்து தற்காலிக குடிசைகளில் வாழும் நாகரூத்து கிராம பழங்குடியினர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே பழங்குடியின கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகளை இழந்து ஓராண்டாகியும், குடியிருப்புகள் இல்லாமல் பழங்குடியின மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சர்க்கார்பதி பகுதியில் காண்டூர் கால்வாய்க்கும் பீடர் கால்வாய்க்கும் இடையில் நாகரூத்து - 2என்னும் மலைக் கிராமம் உள்ளது. இங்கு மலசர் இன மலைவாழ் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 -ம் தேதி இரவு பெய்த கன மழையால், இந்த கிராமத்துக்கு மேல் உள்ள கொழும்பன் மலையில் மண் சரிவும், காட்டாற்று வெள்ளமும் உருவானது. வெள்ளத்தோடு உருண்டு வந்த பாறைகள் அங்கிருந்த 22 வீடுகளை அடித்துச் சென்றது. இதில் குஞ்சப்பன் என்பவரது குழந்தை சுந்தரி (2) உயிரிழந்தார். வீடு, உடைமைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். ஓராண்டு நிறைவடைந்தும், தற்போதுவரை அவர்களுக்கு புதிய குடியிருப்புகளை அரசு அமைத்து தரவில்லை. வேறுவழியின்றி ஆற்றுச்சரிவிலும், மண் திட்டுகளிலும் குடிசைகள் அமைத்து அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதேபோல, வால்பாறை கல்லாரில் காடர் குடியிருப்பிலும் கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கு வசித்தவந்த 23 குடும்பத்தினரும் வீடுகளை இழந்து தனியார் தேயிலைத் தோட்டத்தின் குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் மாற்றுஇடம் வழங்கவில்லை.

இதுகுறித்து பழங்குடியினர் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர் தன்ராஜ் கூறும்போது, ‘கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் நாகரூத்து – 2 பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்துவருவதால் மரங்கள் சரிந்து குடிசையின் மீது விழும் நிலையில் உள்ளன. அத்துடன் எந்த நேரமும் மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மலைவாழ் மக்கள் ஒவ்வொரு நாளும் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகின் றனர். வீடு கட்டித் தராமலும், மாற்று இடம் வழங்காமலும் இருப்பது இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் 25-வது பிரிவு பழங்குடியினருக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கு முரணானதாகும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x