

தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து, வழிபாடு நடத்தப்படும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊரடங்கு விதிகளைப் பின்பற்றி, விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகள் வைத்து, வழிபாடு நடத்தப்படும் என சென்னையில் தலைமைச் செயலர், டிஜிபிதலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் வலியுறுத்தியிருந்தோம்.
ஆனால், தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், சிலை தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுஉள்ளது. தற்போதைய சூழலில், விநாயகர் வழிபாட்டால், பக்தர்களுக்கும், இந்துக்களுக்கும் தைரியமும், நம்பிக்கையும் பிறக்கும். எனவே, நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்.
காவல், வருவாய் உள்ளிட்ட துறைகளில் நக்சலைட் சிந்தனை கொண்ட அதிகாரிகள் சிலர் உள்ளனர். அவர்கள்தான் முதல்வருக்கு தவறான தகவல்களைத் தெரிவித்து, தடை அறிவிப்பை வெளியிடச் செய்துள்ளனர்.
அரசு அனுமதிக்கவில்லை என்றாலும், தடையை மீறி இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து, வழிபாடுகள் நடத்தப்படும். அரசின் தடையை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் செல்வது குறித்து நிர்வாகக் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்றார்.