குப்பை சேகரிக்கும் மூதாட்டிகளின் வீட்டில் 2 லட்சம் ரூபாய் நோட்டுகள் சிக்கின; 7 பவுன் நகை; 49 கிராம் வெள்ளிப் பொருட்கள்; 4 குடங்களில் சில்லறை காசுகள்

வீட்டில் இருந்த குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு பணத்தை எண்ணும் போலீஸார்.
வீட்டில் இருந்த குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு பணத்தை எண்ணும் போலீஸார்.
Updated on
1 min read

சென்னையில், குப்பை சேகரித்து அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வந்த மூதாட்டிகள் வீட்டில் ரூ.2 லட்சம் இருந்துள்ளது. அதில், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளன. மேலும் 4 குடங்கள் நிரம்பும் அளவுக்கு சில்லறை காசுகளும் இருந்துள்ளன.

ஓட்டேரியை அடுத்த சத்தியவாணிமுத்து நகரில், ராஜேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் பிரபாவதி ஆகிய மூன்று மூதாட்டிகள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை சேகரித்து விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் பிரபாவதி உயிரிழந்து தெருவில் கிடந்ததை அறிந்த, தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, காவலர்கள் உதவியுடன் காலமான மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்தார்.

இந்நிலையில், மீதம் உள்ள 2 மூதாட்டிகளும் அதே பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். தாங்கள் சேகரித்த குப்பைகளை வீட்டில் குவித்து வைத்தனர்.

இதனால், அவர்கள் அங்கு தங்க முடியாத அளவுக்கு குப்பை சேர்ந்தது. இதையடுத்து அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளியே சாலையோரத்தில் படுத்து தூங்கியுள்ளனர்.

மேலும் நீண்ட நாட்கள் பயன்படுத்தாததால் வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது.

இரு மூதாட்டிகளும் சாலையோரம் பரிதாபமாக அமர்ந்திருப்பதை கண்ட ஆய்வாளர் ராஜேஸ்வரி இருவரையும் அழைத்து விசாரித்துள்ளார். அவர்கள் தங்கள் நிலையை கூறிய உடன் காவல்ஆய்வாளர் மாநகராட்சி ஊழியர்களை அழைத்து மூதாட்டிகளின் வீடுகளில் இருந்த குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினார்.

அப்போது, வீட்டுக்குள் குப்பைகளுக்கு மத்தியில் ரூ.2 லட்சம் அளவுக்கு 10, 20, 50, 100, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 7 பவுன் நகை, 49 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்துள்ளன.

மேலும், 4 குடங்கள் நிரம்பும் அளவுக்கு சில்லறை காசுகளும் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அதை மூதாட்டிகளிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

மேலும் போலீஸார் மாநகராட்சி பணியாளர் உதவியுடன் மூதாட்டிகளின் வீட்டை சுத்தம் செய்து கொடுத்தனர். போலீஸாரின் இந்தமனிதாபிமான செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in