

காணாமல் போன 10 மீனவர்களை வெளிநாட்டு கடல் பகுதிகளில் தேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 23-ம் தேதி பார்த்திபன், சிவக்குமார் உட்பட 10 மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இதுவரை கரை திரும்பவில்லை. இவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த கோரி நேற்று முன்தினம் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்நிலையம் எதிரில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில், அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மீன்வளத்துறை, இந்திய கடலோர பாதுகாப்பு படை மற்றும் சென்னை மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த உள்ளூர் விசைப்படகுகளை கொண்டு காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 விமானங்கள்
ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்பகுதிகளில் இப்படகை தேடும் பணியை மேற்கொள்ள அம்மாநில மீன்வளத்துறை இயக்குநர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடலோர காவல் படையின் 5 கப்பல்கள் மற்றும் 2 விமானங்கள் இத்தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படையிடம் இருந்து தகவல் பெறப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறையின் மூலம் மியான்மர், வங்கதேசம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடல் பகுதிகளிலும் காணாமல் போன மீனவர்கள் மற்றும் படகை தேடுவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்கள் மற்றும் படகைகண்டறிந்து பாதுகாப்பாக மீட்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
தூர்வாரும் பணிகள்
மேலும், தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளதால் தூர்வாரும் பணிக்காக ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கி ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.