

ரூ.9.66 கோடியில், தமிழகத்தில் 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் வகையில், 3,501 நகரும் அம்மாரேஷன் கடைகள் ரூ.9 கோடியே66 லட்சம் செலவில் தொடங்கப்படும் என்று கடந்த மார்ச் 20-ம்தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதைச் செயல்படுத்தும் வகையில் அரசாணையும் வெளியிடப்பட்டது. தற்போது இத்திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இக்கடைகளை தொடங்குவது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் செயல்பட உள்ள அனைத்து அம்மா நகரும் ரேஷன்கடைகளும் செயல்படும் நாள் மற்றும் செயல்படும் இடம் ஆகியவற்றுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும். அம்மாநகரும் ரேஷன் கடைகளை செயல்படுத்த தேவையான வாகனங்களை வாடகைக்கு அமர்த்த, வாடகை நிர்ணயிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். அந்த குழு வாடகை, பொருட்களை ஏற்றி இறக்குவதற்கான கூலி ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயிக்கலாம்.
நகரும் ரேஷன் கடைகளில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருட்களுக்கு தகுந்த இடப் பெயர்வுகாப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். முதல்வரால் இத்திட்டம் விரைவாக தொடங்கப்பட உள்ளதால், இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 401 கடைகள்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக தேவையான நகரும் ரேஷன் கடைகளை மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 88 ஆயிரத்து 770 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 401 கடைகள் தொடங்கப்பட உள்ளன. நாகை மாவட்டத்தில் 262, திருவண்ணாமலை 212 கடைகள் தொடங்கப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் குறைந்த பட்சமாக நீலகிரியில் 11 கடைகள், கோவையில் 33 கடைகள் மட்டுமே தொடங்கப்படுகின்றன. ஒட்டு மொத்தமாக 3 ஆயிரத்து 501 கடைகள் மூலம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர்.