Published : 13 Aug 2020 09:16 PM
Last Updated : 13 Aug 2020 09:16 PM

விவசாயத் திட்டங்களில் ஊழல்; நில உடைமைப் பதிவேடுகள் மறு வகைப்பாடு செய்யாததே காரணம்- பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

பிஎம் கிசான் உள்ளிட்ட விவசாயிகளுக்கான திட்டங்களில் ஊழல் முறைகேடுகள் நடைபெற காரணம் நில உடைமைப் பதிவேடுகள் மறு வகைப்பாடு செய்யாததே என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''தமிழ்நாட்டில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேளாண் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் (பிஎம் கிசான்) விவசாயிகள் ஊக்கத் திட்டத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் ஹெக்டேர் ஒன்றுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6,000 வீதம் 3 தவணைகளாகப் பிரித்துச் சுமார் 65 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு வழங்க, தமிழக வேளாண் துறையால் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 40 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டு வருகிறது.

எஞ்சியுள்ள 25 லட்சம் குடும்பங்களுக்கு பயனாளிப் பட்டியல் இறுதி செய்யப்படாததால் உண்மையான விவசாயிகள் பயன் பெற முடியாத நிலையும் உள்ளதாகத் தெரிய வருகிறது.

மேலும், கூடுதலாக 50 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களையும் பயனாளிகள் பட்டியலில் கொண்டு வர முடியாத நிலை தொடர்கிறது . இந்நிலையில், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பிஎம் கிசான் திட்டத்தில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதற்கு அடிப்படைக் காரணம், தமிழ்நாட்டில் 1984-க்குப் பிறகு நில உடைமைப் பதிவேடுகள் மறு வகைப்பாடு செய்யப்படவில்லை. இதனால் ஆண்டுதோறும் ஜமாபந்திக் கூட்டங்கள் கூட ஒத்திசைவு இறுதிபடுத்தப் படாமலேயே சடங்கு நிகழ்வாக முடிகிறது.

இந்நிலையில், மத்திய அரசு அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கணினி மயமாக்கப் பட்டுள்ளதாகச் சொல்கிறது. விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் திட்டங்களுக்கான பயனாளிகளை, இணைய தளம் மூலமாகத் தேர்வு செய்து வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

இதனைப் பின்பற்றி கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே கடன் உள்ளிட்ட அனைத்து விவசாய மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தக் கொள்கை முடிவெடுத்துப் பின்பற்றி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் எந்தவொரு விவசாயிக்கும் இதுநாள் வரை கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படவில்லை.

இதனால் விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் திட்டங்களுக்கான நிதியில் 50 சதவீதம் ஊழல் முறைகேடுகள் நடக்கின்றன. இவை அனைத்துக்குமே அடிப்படை காரணம், நில உடைமைப் பதிவேடுகள் தமிழகத்தில் இன்றைய நிலைக்கு மறு வகைப்பாடு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படாதுதான் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

எனவே, தமிழக அரசு உடனடியாக உயர் மட்டக்குழு அமைத்து வருவாய்த்துறை நில உடமைப் பதிவேடுகளை இன்றைய நிலைக்கு மறுவகைப்பாடு செய்து கணினியில் பதிவேற்றம் செய்திட முன்வர வேண்டும். கோயில்கள், அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குத்தகைப் பதிவு செய்து தர வேண்டும். குத்தகை பாக்கி என்கிற பெயரில் பதிவு ரத்து செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும். வறட்சி, பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அரசிதழில் வெளியிடப்பட்ட ஆண்டுகளுக்கு குத்தகைத் தொகை பாக்கிகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து குத்தகை விவசாயிகள் உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.

மேலும், வருவாய் கிராமங்கள்தோறும் சாகுபடிப் பணியில் ஈடுபடும் விவசாயிகள் விவரப் பட்டியலை ஆண்டுக்கு ஒருமுறை தயார் செய்து வெளியிட வேண்டும்''.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x