கரோனாவால் உயிரிழந்த ஏட்டு, தலையாரி குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கல்

கரோனாவால் உயிரிழந்த ஏட்டு, தலையாரி குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கல்
Updated on
1 min read

கரோனாவால் உயிரிழந்த ஏட்டு மற்றும் கிராம உதவியாளர் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலைகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று வழங்கினார்.

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 10,629 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 142 பேர் உயிரிழந்துள்ளனர். 9,055 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

1,432 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 82 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இதுவரை 3,114 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 1.62 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் 4,143 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 10 நாள்களில் மட்டும் 39,849 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 4 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் 115 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கூட்டத்தில், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேட்டறிந்து, ஆலோசனைகள் வழங்கினார்.

அப்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அய்யனார் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த ரூ.50 லட்சத்திற்கான காசோலையையும், சின்னமூப்பன்பட்டி கிராம உதவியாளர் மருகேசனின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலைகளையும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in