Published : 13 Aug 2020 18:54 pm

Updated : 13 Aug 2020 18:54 pm

 

Published : 13 Aug 2020 06:54 PM
Last Updated : 13 Aug 2020 06:54 PM

கரோனா தொற்றிலிருந்து அந்தமான் நிகோபர் மக்களைக் காப்பாற்றுங்கள்: பிரதமருக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்

letter-to-modi

சென்னை

அந்தமான் நிகோபர் தீவுகளில் கரோனா தொற்றுநோயால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்:


“அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள உங்களது கட்சியின் (பாஜக) உறுப்பினர்களுக்கு நீங்கள் உரையாற்றியது தொடர்பான ஊடகச் செய்திகளைக் கவனித்தேன். அத்தீவுகளுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைய தொடர்பு வசதிகளை செய்து தருவதாக மீண்டும் அறிவித்திருக்கிறீர்கள். இது இந்திய அரசால் பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒரு பணியாகும்.

கிடைத்துள்ள தகவல்கள்படி, சென்னையிலிருந்து கடலுக்கு அடியில் கேபிள்களைக் கொண்டு செல்லும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. எனினும், அந்தமான் நிகோபர் தீவுகளின் மக்களது வாழ்வியல் நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மிகவும் வரவேற்கத்தக்கதே.

கரோனா தொற்றுநோய் பரவலால் மிகக் கடுமையான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தத் தருணத்தில், அத்தீவுகளின் மக்களது வாழ்வைப் பாதுகாக்கவும், நிவாரணம் அளிக்கவும் மத்திய அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்தமான் தீவுகளுக்கும் நிகோபர் தீவுகளுக்கும் இடையே அதிக தூரம் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

கரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஒட்டுமொத்தத் தீவுகளுக்கும் சேர்த்து தலைநகர் போர்ட்பிளேரில் மட்டும் ஒரே ஒரு கரோனா பரிசோதனை மையமும் ஒரே ஒரு கரோனா சிகிச்சை மருத்துவமனையும் இருக்கிறது என்பதைக் கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இங்கு எடுக்கப்படும் பரிசோதனைக்கு முடிவுகள் தெரிய எட்டு நாட்கள் ஆகின்றன. அதற்குள் சம்பந்தப்பட்ட நோயாளி மிகுந்த கவலைக்கிடமான நிலைக்குள் தள்ளப்படுகிறார். மீட்கமுடியாத அளவிற்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட துயரங்களுக்கு ஆளாகிறார்.

மேற்கண்ட கரோனா சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றிய 18 மருத்துவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு அந்தமான் தீவுகளில்தான், இந்த ஒட்டுமொத்த பிரதேசத்தின் சரிபாதி மக்கள் வசிக்கிறார்கள்.

இத்தீவுகள், தலைநகர் போர்ட்பிளேரிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. இத்தீவுகளிலிருந்து, போர்ட்பிளேர் கரோனா மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வந்தடைய பல நாட்கள் ஆகின்றன. இந்த நிலைமையில் இத்தீவுகளில் கூடுதலான கரோனா பரிசோதனை மையங்கள் உடனடியாகத் திறக்கப்படுவது அவசியமாகும். பரிசோதனை எடுப்பதற்கும் முடிவுகளை அறிவிப்பதற்குமான காலம் கட்டாயம் குறைக்கப்பட வேண்டும்.

அதற்கேற்றவாறு கூடுதல் வசதிகளை உடனே செய்திடவேண்டும், இத்தீவுகளின் பல பகுதிகளில் கரோனா பாதித்த நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் திறனுடன் கூடிய சிகிச்சை மையங்கள் உடனடியாக திறக்கப்படவேண்டும்; போர்க்கால அடிப்படையில் இப்பகுதி மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் செய்யப்பட வேண்டும்.

அந்தமான் நிகோபர் தீவுகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள, மத்திய அரசின் நேரடி நிர்வாகம் நடக்கிய ஒரு யூனியன் பிரதேசமாகும். இத்தீவுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் ஏதுமில்லை. எனவே மத்திய அரசின் நிர்வாகத்தைத் தவிர உதவி கேட்பதற்கு இம்மக்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை.

எனவே, அந்தமான் நிகோபர் தீவுகள் உங்களது அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்கிற முறையில், அங்கு போர்க்கால அடிப்படையில் மேலே குறிப்பிட்டுள்ள உடனடி நடவடிக்கைகளை அவசரமாகச் செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தவறவிடாதீர்!


Save Andaman and Nicobar IslandsCoronaSitharam YechuryLetter to PMCPMMODICorona tnCorona virusகரோனாஅந்தமான் நிகோபார் தீவுகள்காப்பாற்றுங்கள்பிரதமர்சீத்தாராம்யெச்சூரிகடிதம்கரோனா வைரஸ்கொரோனா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author