

‘‘அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இணைந்து முடிவு எடுப்பர்,’’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் ஜி.பாஸ்கரன் திருப்பத்தூரில் 193 பயனாளிகளுக்கு ரூ.29.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிங்கம்புணரியில் 183 பயனாளிகளுக்கு ரூ.15.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தொடர்ந்து எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடைப்பட்டியில் ரூ.2 லட்சத்தில் ஆழ்த்துளை கிணறு அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், கோட்டாட்சியர் சுரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிறகு அமைச்சர் ஜி.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இணைந்து முடிவு எடுப்பர்.
அதன்படி நாங்கள் நடப்போம். வருகிற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். மேலும் சிவகங்கை மாவட்டத்திற்கு முதல்வர் ஆய்வுக்கு வரும்போது, பல நல்ல திட்டங்களை அறிவிக்க உள்ளார்,’’ என்று கூறினார்.