

குற்றாலம் அருகே யானை தாக்கி உயிரிழந்த வேட்டைத் தடுப்புக் காவலர் உடல் 12 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி அருகே உள்ள குண்டர்தோப்பு, தெற்குமலை எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றித் திரிந்தது.
25 முதல் 30 வயதுள்ள பெண் யானை தனியார் நிலங்களில் உள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தி வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், கடந்த 2 நாட்களாக யானை நடமாட்டத்தை கண்காணித்து, அதனை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலையில் மீண்டும் அந்த யானை குற்றாலம் குற்றாலம் குண்டர்தோப்பு பகுதியில் சுற்றித் திரிந்தது. இதையடுத்து, வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றபோது, அது மிரட்டு ஓடாமல் வனத்துறையினரை நோக்கி வேகமாக வந்தது .இதனால், வனத்துறையினர் தப்பி ஓடினர்.
அப்போது, யானையை விரட்டும் பணியில் ஈடுபட்ட நன்னகரத்தைச் சேர்ந்த வேட்டைத் தடுப்பு காவலர் முத்துராஜ் (57) திரும்பி வராதது தெரியவந்தது.
இதையடுத்து, தீப்பந்தங்களுடன் மீண்டும் சென்று பார்த்தபோது, யானை மிதித்து முத்துராஜ் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
யானை அதே பகுதியில் சுற்றித் திரிந்ததால் முத்துராஜ் உடலை மீட்க முடியாமல் சிரமப்பட்டனர். பாதுகாப்பு கருதி யானையை விரட்டும் பணியை நிறுத்திவைத்தனர்.
தீப்பந்தங்களை ஏற்றி இரவில் அங்கேயே வனத்துறையினர் முகாமிட்டு முத்துராஜ் உடலை பாதுகாத்தனர். இன்று காலையில் யானை அங்கிருந்து சென்றது.
இதையடுத்து, சுமார் 12 மணி நேரம் கழித்து முத்துராஜ் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிரேதப் பரிசோதனைக்கு பின்னர், முத்துராஜ் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு உரிய நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
யானை தாக்கி ஒருவர் உயிரிழந்திருப்பதால், குற்றாலம் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குச் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
யானையை எவ்வாறு அங்கிருந்து வெளியேற்றுவது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யானை நடமாட்டம் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்புப் பணி நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.