

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக செவிலியர் ஒருவர் கரோனாவால் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூரைச் சேர்ந்த இளையராஜா மனைவி கலைச்செல்வி (41). இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டப் பிரிவில் தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த மாதம் 26-ம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டது. அதனையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து 3 நாட்கள் சிகிச்சை பெற்ற செவிலியர், அதனையடுத்து இங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 11-ம் தேதி உடல்நிலை சரியாகி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்றார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் செவிலியர் கலைச்செல்வி நேற்று அதிகாலை வீட்டில் உயிரிழந்தார். அதனையடுத்து சுகாதாரத்துறையினர் பாதுகாப்பாக அவரது உடலை அடக்கம் செய்தனர்.
செவிலியர் கலைச்செல்வியின் கணவர் இளையராஜா பாண்டியூரில் மருந்தகம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பால் தனியார் மருத்துவர் உள்ளிட்ட 79 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் செவிலியர் ஒருவர் மாவட்டத்தில் முதன் முறையாக கரோனாவால் உயிரிழந்துள்ளார்.