Published : 05 Sep 2015 08:31 AM
Last Updated : 05 Sep 2015 08:31 AM

எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் விழி ஒளி பரிசோதகர் பட்டப் படிப்பு: சேர்க்கை ஆணை வழங்கினார் சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழகத்தில் முதல்முறையாக அரசு சார்பில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இந்த கல்வி ஆண்டு முதல் விழி ஒளி பரிசோதகர் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் பி.எஸ்சி. விழி ஒளி பரிசோதகர் (B.Sc. Optometry) 4 ஆண்டு பட்டப் படிப்பு இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கா.நமிதா புவனேஸ்வரி விழாவுக்கு தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எஸ்.கீதாலட்சுமி, விழி ஒளி பரிசோதகர் ஆர்.கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 20 மாணவர் களுக்கு சேர்க்கை கடிதத்தை வழங்கினார். அதன்பின் மருத்துவ மனையை ஆய்வு செய்து ரூ.36.50 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் கோகரன்ஸ் டொமோ கிராபி கருவி, ரூ.15.58 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ள கியூவா பண்டஸ் கேமரா கருவி, ரூ.12.50 லட்சத்தில் வாங்கப்பட்ட பெரி மீட்டர் ஆட்டோமோட்டோ கருவி மற்றும் ரூ.3 லட்சத்தில் வாங்கப்பட்ட ஸ்லிட் லேம்ப் இமேஜிங் சிஸ்டம் கருவியை பார்வையிட்டார்.

இந்த விழாவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

விழி ஒளி பரிசோதகர் படிப்பு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் வழியாக 3 ஆண்டுகளும், ஒரு வருடம் மருத்துவமனையில் செய்முறைப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டப் படிப்பு புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடுத்ததாக தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மிகக் குறைந்த கட்டணத்தில் உயர்தர தொழில் கல்வி பயில இந்த படிப்பை அரசே தொடங்கியுள்ளது. இந்த பட்டப் படிப்பை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் தொடங்குவதற்கான அனுமதியைப் பெற பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. இது தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x