Last Updated : 13 Aug, 2020 04:59 PM

 

Published : 13 Aug 2020 04:59 PM
Last Updated : 13 Aug 2020 04:59 PM

கரோனா ஊரடங்கு தொடர்வதால் கடன் தவணை வசூலிக்கத் தடை கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை

கடன் தவணையை வசூலிக்கத் தடை கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணியின் குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கரோனா ஊரடங்கால் தொழில்முடக்கம், நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் வருமானமில்லாமல் மக்கள் இருப்தால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான தவணையை மார்ச் முதல் மே வரை செலுத்த தேவையில்லை என கடந்த மார்ச் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால் கடனுக்கான தடணை செலுத்தும் காலத்தை கூடுதலாக 3 மாதங்கள் அதாவது, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் பெரும்பாலான வங்கிகள், நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் உத்தரவை அமல்படுத்தவில்லை. கடனுக்கான தவணையை செலுத்த கால அவகாசம் கேட்டு கடன்தாரர்கள் அனுப்பும் கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

சில நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி உத்தரவு எங்களுக்கு பொருந்தாது என்கின்றனர். சில நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி உத்தரவை அமல்படுத்த முடியாது என நேரடியாகவே சொல்கின்றன. பல நிறுவனங்கள் கடன் தவணை சலுகை கோரி அனுப்பும் விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் அப்படியே வைத்துள்ளன.

வேறு சில நிதி நிறுவனங்கள் கடன் தவணை சலுகை கேட்டு விண்ணப்பிக்க தனிக்கட்டணம் வசூலிக்கின்றன.

கடன் தவணை செலுத்த தவறியதால் பல நிதி நிறுவனங்கள் கடன் பெற்று வாங்கிய இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றன. வங்கி கணக்கில் இருப்பில் உள்ள பணத்தை சம்மதம் இல்லாமல் பிடித்தம் செய்கின்றன. கடனை திரும்ப செலுத்துமாறு கடன்தாரர்களை நிதி நிறுவனங்கள் நேரில் மிரட்டுகின்றன. இதனால் நாடு முழுவதும் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து வருவாய் இல்லாமல் தவிக்கும் கடன்தாரர்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர்.

அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ரிசர்வ் வங்கிக்கு கட்டுப்பட்டவையே. ரிசர்வ் வங்கியின் உத்தரவை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மறுப்பு தெரிவிக்காமல் அமல்படுத்த வேண்டும். தவறும் நிதி நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.

எனவே கடனுக்கான தவணை செலுத்த கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி 27.3.2020-ல் பிறப்பித்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தி, கடன் தவணை செலுத்த அவகாசம் வழங்கிய காலத்தில் வசூலித்த கடன் தவணை தொகையை திரும்ப வழங்கவும், ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணையை வசூலித்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதுவரை ரிசர்வ் வங்கி உத்தரவுபடி கடன்தாரர்களிடம் இருந்து கடன் தவணை வசூலிக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுனர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x