

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
சிவகாசி -வெம்பக்கோட்டை சாலையில் கோடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கேப் வெடிகள் தயாரிக்கும் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு, சிறுவர்கள் தீபாவளி துப்பாக்கியில் வைத்து வெடிக்கும் பொட்டுகேப், ரோல்கேப் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
தயாரான ரோல்கேப் வெடிகளில் காகிதங்களைக் கத்தரித்து வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு அறையில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.
அந்த அறையில் இருந்த கேப் வெடிகள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. அந்த அறையும் இடிந்து சேதமடைந்தது.
மேலும், வெடி விபத்து ஏற்பட்ட அறையிலிருந்த அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், ஜெயமுத்து இருவரும் பலத்த காயமடைந்தனர்.
தகவறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.