

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சத்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும் மழை மற்றும் வறட்சிக் காலத்தில் நிவாரணம் வழங்கும் வகையிலும் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரியின் கிசான் திட்டம் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 3 தவணையாக வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற வருவாய்த் துறை அதிகாரிகளிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா, சிட்டா ஆகியவை பெற்று, அவற்றுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை அந்தந்தப் பகுதி வேளாண்மைத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து அவர்கள் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இந்த நிதி உதவியைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில், இதில் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால், அதிக அளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து விவசாயிகள் தானாக முன்வந்து, தனியார் கணினி மையத்தில் ஆன்லைனில் நிதி உதவிக்கு விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடலூர் அருகே உள்ள பிள்ளையார் மேடு கிராமத்திலும், புவனகிரி அருகே உள்ள வளையமாதேவி கிராமத்திலும் விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கிக் கணக்கில் 2 தவணையாக ரூ.4,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துத் தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி இதுகுறித்து விசாரணை நடத்த வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வளையமாதேவி, பிள்ளையார்மேடு ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு மேல் போலி நபர்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது நெய்வேலி கணினி மையம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கணினி மையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மாவட்டத்தில் அனைத்து வட்டாரத்திலும் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.