

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியே இருக்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என்றும் அவருக்கு கட்சியில் எந்தப் போட்டியும் இல்லை என்றும் அதிமுக அமைப்பு செயலாளரும் நெல்லை ஆவின் தலைவருமான சுதாபரமசிவன் தெரிவித்தார்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக பழனிசாமியே இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவரே முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆசியுடனும், மக்கள் நல்லாதரவுடனும் பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக வருவார்.
இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக தயாராக இருக்கிறது. நாட்டின் ஒப்பற்ற முதல்வராக கரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் ஈடுபட்டுள்ளார். ஜெயலலிதாவுக்குப்பின் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியவர். அவரால்தான் கட்சியையும், மக்களையும் காப்பாற்ற முடியும். ஜெயலலிதா இருக்கும்போது கட்சி ஒரு கண், ஆட்சி ஒரு கண் என்று தெரிவித்திருந்தார். அதுபோல் கட்சியை ஒரு கண்ணாகவும், ஆட்சியை ஒரு கண்ணாகவும் கருதி செயல்படுகிறார் பழனிசாமி.
ஜெயலலிதாவுக்குப்பின் சுகாதாரத்துறையை நாட்டிலேயே முதலிடத்தில் கொண்டுவந்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரமுடியாது. மக்கள் அக்கட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். அதிமுகவின் எஃகு கோட்டையாக திருநெல்வேலி மாவட்டம் இருக்கும். அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு போட்டியே இல்லை.
மீண்டும் பழனிசாமி முதல்வராக வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் எண்ணம். ஜெயலலிதாவை என்ன செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அதிமுகவில் தனிப்பட்ட யாருக்கும் செல்வாக்கு இல்லை. இரட்டை இலைக்குத்தான் செல்வாக்கு உள்ளது.
அதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகள்தான் வந்து சேரவேண்டும். அதிமுக பெரிய கட்சி. நாங்கள் யாரிடமும் சென்று கூட்டணி சேரமாட்டோம் என்று தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்ட அதிமுக அவை தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.