Published : 13 Aug 2020 03:34 PM
Last Updated : 13 Aug 2020 03:34 PM

அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள் கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிருஷ்டவசமானது; உயர் நீதிமன்றம் வேதனை

அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி ஜமுனா, சென்னை உயர் நீதிமன்றத்தில்
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று (ஆக.13) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு, அரசியல் பின்புலத்துடன் குற்றவாளிகள் பலர் புதுச்சேரியில் உலா வருவதாக தெரிவித்தனர்.

அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிருஷ்டவசமானது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

குற்றவாளிகளுக்குக் கட்சியில் இடமளிப்பது, தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது போன்றவற்றை, கட்சிகளின் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே, அரசியலை தூய்மைப்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

குற்றவாளிகள் அரசியலுக்குள் நுழைந்து, எம்.பி., எம்எல்ஏக்கள் ஆகி, அமைச்சராகவும் பதவி ஏற்பது, மக்களுக்குத் தவறான தகவலை கொண்டு சேர்க்கும் எனத் தெரிவித்த நீதிபதிகள், குற்றவாளிகள், அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டனர்.

இதைத் தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், புதுச்சேரியில் எத்தனை ரவுடிக் கும்பல்கள் உள்ளன? குற்றப் பின்னணியுடன் அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் எத்தனை பேர்? ரவுடிக் கும்பல்கள் மீதான வழக்குகள் மீதான வழக்குகள் எத்தனை? அந்த வழக்குகளின் நிலை என்ன? சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளிக்க வற்புறுத்தப்படுகிறார்களா? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? நாட்டு வெடிகுண்டுகளை போல, சட்டவிரோத ஆயுதங்கள் ஏதேனும் புதுச்சேரியில் பயன்படுத்தப்படுகின்றனவா? மகாராஷ்டிரா போல புதுச்சேரியில் ரவுடி கும்பலை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரக் கூடாது என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அவற்றுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x