

சித்தா, யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அவை தமிழக அரசா புறக்கணிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் முதல்வருக்கு எதிராக திருத்தணிகாச்சலம் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்த நிலையில், குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு விசாரணையில், சித்த மருத்துவ சிகிச்சை தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும், ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் தமிழக அரசும், மத்திய ஆயுஷ் அமைச்சகமும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மத்திய மாநில அரசுகள் பதில் மனுக்களை தாக்கல் செய்தன. மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “கடந்த 10 ஆண்டுகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட துறைகளுக்கு 239 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது”. எனத் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “இந்திய மருத்துவ முறை சார்ந்த மருந்துகளை கொள்முதல் செய்ய ஆண்டு தோறும் 23 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது, தமிழக பட்ஜெட்டில் ஆண்டுதோறும் இந்திய மருத்துவ முறைகளுக்காக 184 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது”. எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் , “சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை”. எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சித்த, யுனானி ஆயுர்வேத உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-க்கு ஒத்தி வைத்தனர்.