ஓடை கடைகளை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டியில் பாரதிய ஜனதா திடீர் மறியல்

ஓடை கடைகளை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டியில் பாரதிய ஜனதா திடீர் மறியல்

Published on

கோவில்பட்டியில் ஓடை கடைகளை முழுமையாக அகற்றிவிட்டு சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டியில் இலக்குமி ஆலை மேம்பாலத்தில் இருந்து ரயில்வே நிலைய மேம்பாலம் வரை சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. இதில் தினசரி சந்தை சாலை அருகே இருந்து சாலை விரிவாக்கத்திற்காக இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், 106 ஓடை கடைகளை முழுமையாக அகற்றி விட்டு, 56 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் தினசரி சந்தை சாலை சந்திப்பு அருகே திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி, பட்டியில் அணி மாநில செயலாளர் சிவந்தி நாராயணன், மாவட்ட செய்தி தொடர்பு பிரிவு தலைவர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் சென்னகேசவன், மாநில விவசாய அணி முன்னாள் செயலாளர் ராமகிருஷ்ணன், நகர பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், முனியராஜ், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் கோமதி, ஒன்றிய தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தகவலறிந்து காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன், காவல் ஆய்வாளர் சுதேசன், வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அவர்களை அழைத்தனர்.

இதையடுத்து கோட்டாட்சியர் விஜயா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஓடை கடைகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு, 56 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். ஓடை கடைகளை அகற்றும் வரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து இது தொடர்பாக வரும் 18-ம் தேதி சமாதான கூட்டம் நடத்துவது, அதுவரை பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்துடு பாரதிய ஜனதா கட்சியினர் கலைந்து சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in