

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில் முத்து ஆகியோரின் ஜாமீன் மனுக்களை மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கின் போது கூடுதல் நேரம் செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக கூறி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல்நிலை காவர் முத்துராஜா ஆகியோரை முதலில் கைது செய்தனர்.
பின்னர் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமை காவலர் சாமிதுரை, முதல்நிலை காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரை கரோனா தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உடல்நல குறைவு காரணமாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். கூடவே காவலர் வெயில்முத்துவும் ஜாமீன் கோரியிருந்தார். அது தொடர்பான மனு இன்று மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தாண்டவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் விஜயன் செல்வராஜ் வாதம் செய்தார்.
மனுக்களை விசாரித்த நீதிபதி தாண்டவன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.